8 வழிச்சாலைத் திட்டம் ரத்து: PMK விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை & சேலம் இடையிலான 8 வழி பசுமைச்சாலைத் திட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இத்தீர்ப்பு 5 மாவட்ட உழவர்கள் நலனைக் காப்பதற்காக பா.ம.க சார்பில் நான் மேற்கொண்ட சட்டப் போராட்டத்திற்கும், உழவர்களுக்கும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும்.


சென்னை & சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அத்திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கும், மேற்கு மாவட்டங்களின் நுழைவாயிலாகத் திகழும் சேலம் நகருக்கும் இடையே வலிமையான, வசதியான சாலைக் கட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. 


ஆனால், சென்னையிலிருந்து சேலத்திற்கு உளுந்தூர்பேட்டை வழியாக ஒரு தேசிய நெடுஞ்சாலை, வேலூர், கிருஷ்ணகிரி வழியாக இன்னொரு நெடுஞ்சாலை என  இரு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து திண்டிவனம், -கிருஷ்ணகிரி வழியாக மூன்றாவது தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இவை தவிர மாநில சாலைகளும் உள்ளன. இவ்வளவும் போதாதென சேலத்திற்கு புதிதாக 8 வழி சாலை அமைக்க வேண்டிய தேவை என்ன? என்ற வினாவை பா.ம.க. தொடர்ந்து எழுப்பி வந்தது. இந்தத் திட்டத்திற்காக 7000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்பதால் 10 ஆயிரத்திற்கும் கூடுதலான விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று தொடர்ந்து கூறி வந்தது. இத்திட்டத்தை எதிர்த்து பா.ம.க. பல்வேறு போராட்டங்களை நடத்தியது.


அதுமட்டுமின்றி, இத்திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய 5 மாவட்ட மக்களை விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்தேன். இந்த வழக்கைத் தொடர்ந்த சில வாரங்களில் 8 வழிச்சாலைக்காக நிலங்களைக் கையகப்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்போது இத்திட்டத்திற்கு முழுமையானத் தடை விதிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.


பாட்டாளி மக்கள் கட்சி உழவர்களுக்கான கட்சி. உழவர்கள் நலனுக்காக இதுவரை எத்தனையோ விஷயங்களில் அரசியல் போராட்டங்ளையும், சட்டப் போராட்டங்களையும் நடத்தி வெற்றி பெற்றுள்ளது. அதே எண்ணத்துடனும், உணர்வுடனும் தான் இந்தத் திட்டத்தை எதிர்த்தும் பாட்டாளி மக்கள் கட்சி சட்டப் போராட்டத்தையும், அரசியல் போராட்டத்தையும் நடத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தில் எனக்கு கிடைத்துள்ள வெற்றியை உலகுக்கே உணவு படைக்கும் கடவுள்களாக நான் மதிக்கும் உழவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். பா.ம.க. உழவர்களுக்கான கட்சி என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.


சென்னை&சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கான அறிவிக்கையை ரத்து செய்துள்ள உயர்நீதிமன்றம், இத்திட்டம் குறித்து உழவர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி, சுற்றுச்சூழல் அனுமதி பெற்று இத்திட்டம் குறித்து முடிவு செய்யலாம் என்றும் கூறியுள்ளது. ஆனால், பசுமைவழிச் சாலைத் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இந்த நிலைப்பாட்டை மத்திய, மாநில அரசுகளிடம் பா.ம.க. வலியுறுத்தும்; வெற்றி பெறும். 


சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு  செய்யக்கூடாது. இந்த வழக்கில் உழவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் எனது சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்படும். சென்னை& சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் உழவர்களின் நலன்களை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பா.ம.க எடுக்கும்.


சென்னையிலிருந்து சேலம் செல்வதற்காக ஏற்கனவே உள்ள சாலைகள் தவிர, வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, அயோத்திப்பட்டினம் வழியாக சேலத்திற்கு செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலை 179- ஏ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் ரூ.521 கோடியில் தயாரிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் 8 வழி பசுமைச்சாலைக்கு தேவையே இருக்காது.


அதேநேரத்தில் 8 வழிச்சாலைத் திட்டத்தில் திமுகவின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 8 வழிச்சாலைத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக திமுக ஒரு துரும்பைக் கூட அசைக்க வில்லை. சட்டப்பேரவையில் கூட, 8 வழிச்சாலைத் திட்டத்தை  நாங்கள் எதிர்க்க வில்லை; மக்களிடம் கருத்துக்கேட்டுவிட்டு திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று தான் கூறுகிறோம் என்று சொல்லியவர் தான் திமுக தலைவர் ஸ்டாலின் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, உழவர்களை பாதிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்யக்கூடாது; செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்டவர் திமுக தலைமை நிலைய வழக்கறிஞர் வில்சன்  என்பதையும் மக்கள் உணர வேண்டும்.


நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு என்றாலும், 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிரான வழக்கு என்றாலும் வெளியில் நல்லவர்களைப் போல நடிக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணியினர் திரைமறைவிலும், நீதிமன்றங்களிலும் மக்கள் நலனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பவர்கள். அனைத்து சிக்கல்களிலும் இரட்டை வேடம் போடுவது தான் அவர்களின் வழக்கம். அந்த இரட்டைவேட துரோகக் கூட்டணிக்கு  வரும் மக்களைவைத் தேர்தலில் தமிழக மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள். இது உறுதி" என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.