பிளாஸ்டிக் பால் கவர்களை பணம் கொடுத்து திரும்ப பெறும் ஆவின்!
ஆவின் பால் பாக்கெடின் பிளாஸ்டிக் கவர்களை பணம் கொடுத்து திரும்ப பெற ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆவின் பால் பாக்கெடின் பிளாஸ்டிக் கவர்களை பணம் கொடுத்து திரும்ப பெற ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஷ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பால் மற்றும் எண்ணை பொருட்களுக்கு இந்த தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாட்டை குறைக்க ஆவின் நிறுவனம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே ஆவின் நிறுவனம் தனது விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கப்புகள் மற்றும் பீங்கான் கப்புகளை பயன்படுத்த அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது பயன்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டு கவர்களை திரும்ப பெற திட்டமிட்டுள்ளது. சென்னையில் ஆவின் நிறுவனம் தினமும் 12 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்து வருகிறது.
பால்களை பயன்படுத்தும் குடும்பத்தினர் தற்போது அதன் கவர்களை குப்பையில் வீசி வருகிறார்கள். அந்த கவர்களை திரும்ப பெற ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பால் கவர்களை திரும்ப ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதற்கேற்ற பணத்தை திரும்ப வழங்கவும் ஆவின் முடிவு செய்துள்ளது. இதற்காக 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நிலையம் அமைக்கும் பணியில் ஆவின் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.
இது குறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சி.காமராஜ் தெரிவிக்கையில்., உபயோகப்படுத்தப்பட்ட பால் கவர்களை திரும்ப பெற்று மறுசுழற்சி செய்ய முடிவு செய்துள்ளோம். இது கூடுதல் சுமை என்றாலும் மக்களிடம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க ஊக்குவிக்கும் செயலாக பார்க்கிறோம். பால் சப்ளை செய்யும் ஊழியர்கள் இந்த பால் கவர்களை திரும்ப வாங்கி கொடுக்கும் போது அவர்களுக்கு ஊக்கத் தொகை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது" என தெரிவித்துள்ளார்.