தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; சத்தீஸ்கர் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு இரு மடங்காக உயர்த்தப் பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில்  அதிக இட ஒதுக்கீடு வழங்கும் இரண்டாவது மாநிலம் என்ற பெருமையை சத்தீஸ்கர் பெற்றுள்ளது. அனைத்துத் தரப்பினருக்கும் உண்மையான சமூகநீதி வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சத்தீஸ்கர் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.


இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி பட்டியலினத்தவருக்கும், பழங்குடியினருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன்படி, சத்தீஸ்கர் மாநில மக்கள்தொகையில் பட்டியலினத்தவரின் பங்கு 12 விழுக்காட்டிலிருந்து 12.8% ஆக அதிகரித்து விட்டதால், அதற்கேற்ற வகையில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு 12 விழுக்காட்டிலிருந்து 13% ஆக அதிகரிக்கப்படும் என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பேகல் அறிவித்திருக்கிறார். பழங்குடியினர் மக்கள்தொகை 32% ஆக இருப்பதால் அவர்களுக்கு வழங்கப்படும் அதே அளவிலான ஒதுக்கீடு நீடிக்கும் என்றும் கூறியுள்ளார்.


அதேநேரத்தில் 41% மக்கள்தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 14% மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், அவர்களுக்கும் உரிய சமூக நீதி வழங்கும் நோக்குடன், அவர்களுக்கான இட ஒதுக்கீடு 27% ஆக உயர்த்தப்படுவதாகவும் சத்தீஸ்கர் முதலமைச்சர் அறிவித்துள்ளார். பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10%  இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று சத்தீஸ்கர் அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதன்படி, 10% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தான் பாதிப்பு ஏற்படும் என்பதால், அதை ஈடுகட்டும் வகையில், அவர்களுக்கான இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்தவும் சத்தீஸ்கர் மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. அவ்வாறு உயர்த்தப்படும் போது அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 100% ஆக உயரக்கூடும். அதுமட்டுமின்றி,  ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு கிடைக்கும். அதுவே உண்மையான சமூகநீதியாக இருக்கும்.


தமிழ்நாட்டிலும் இத்தகைய ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று தான் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; அதனடிப்படையில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தனித்தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான் பா.ம.க. நெடுங்கால கோரிக்கை ஆகும். தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை தீர்மானிக்கும்படி கடந்த 2010-ஆம் ஆண்டு ஆணையிட்டது.


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும்படி அப்போதைய முதலமைச்சர் கலைஞரை, நான் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். ஆனால், அப்போதைய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தவறுதலான வழிக்காட்டுதலால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்தியாவில் இடஒதுக்கீட்டு சூழல் அண்மைக்காலத்தில் வெகுவாக மாறியுள்ள நிலையில், இனியும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், அதனடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்கவும் ஆட்சியாளர்கள் மறுப்பது சமூக அநீதியாக அமையும். இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மிகக்கடுமையாக பாதிக்கும்.


தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, இட ஒதுக்கீட்டை அதிகரிக்க சட்ட ரீதியாகவோ, சமூகரீதியாகவோ எந்த எதிர்ப்பும் எழப்போவதில்லை. இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு  மிகப்பெரிய தடையாக இருந்து வந்தது உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 50% உச்சவரம்பு தான். ஆனால், உயர்சாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக இந்திய அரசியலமைப்பு  சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, இடஒதுக்கீட்டு உச்சவரம்பு அர்த்தமற்றதாக மாறிவிட்டது. 


சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் மட்டும் தான் 50%க்கும் கூடுதலான இட ஒதுக்கீடு வழங்கப் பட்டு வந்தது. ஆனால்,  இப்போது  மராட்டியத்தில் 78%, சத்தீஸ்கரில் 72%, ஹரியானாவில் 70% என பல மாநிலங்களில் தமிழகத்தை விட அதிக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் மேலாக இந்திய விடுதலைக்கு முன்பாகவே தமிழகத்தில் 100% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. மேலும் உச்சநீதிமன்றமே கூறி விட்ட நிலையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுக்க தடையில்லை.


எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதனடிப்படையில் தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும். தேவைப்பட்டால் இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.