நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதான நந்தினி மற்றும் அவரது தந்தை, ஜாமீனில் விடுவித்துள்ளது திருப்பத்தூர் நீதிமன்றம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீதிமன்றத்தை அவமதித்தாக கைதுசெய்யப்பட்ட வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இன்று இருவரையும் ஜாமினில் விடுவித்தார் நீதிபதி.  இதையடுத்து சொந்த ஜாமினில் நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும் விடுதலை செய்யப்பட்டார்கள். 


கடந்த 2014-ஆம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியதால், நந்தினி மீதும் அவரது தந்தை ஆனந்தன் மீதும் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 27-ஆம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நந்தினி, ஐ.பி.சி. 328-ன்படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா? என நீதிபதியிடம் வாதாடினார். 


இதனைத்தொடர்ந்து அவர்மீதும், அவரது தந்தைமீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து இருவரும் கைதுசெய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 


இதற்கிடையில் நந்தினிக்கு ஜூலை 5-ஆம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது, எனினும் அவரும், அவரது தந்தையும் சிறையிலிருந்ததால் திருமணம் நின்றுபோனதும், மேலும் ஜூலை 9-ஆம் தேதி வரை அவர்களை சிறையிலடைக்க திருப்பத்தூர் நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 


இதற்கிடையில் தனது சகோதரியையும், தந்தையையும் விடுவிக்கக் கோரி நந்தினியின் தங்கையும், மதுரை சட்டக் கல்லூரி மாணவியுமான நிரஞ்சனா, நேற்று கல்லூரி முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால், போராட்டத்திற்கு தயாராகி கொண்டிருந்த போது அவரது வீட்டிற்கு சென்ற மதுரை புதூர் காவலர்களை, நிரஞ்சனாவை கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் நந்தினி மற்றும் அவரது தந்தை இருவரும் ஜாமின் கோரியிருந்த நிலையில், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர். பின்னர் இருவருக்கும் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.