சென்னை: தமிழகத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாதது, தலைநகரில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மழையே பெய்யாமலிருந்தது ஆகிய காரணங்களால் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், நீர் நிலைகளும் வற்றியுள்ளதால், நிலத்தடி நீரை பெருமளவு சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து, தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், மாற்றுத் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் குறிப்பாக சென்னையின் குடிநீர் பிரச்சனையை போக்க போர்க்கால அடிப்படையில் தீர்க்க முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 


இந்த ஆலோசனை கூட்டத்திற்க்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது, சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளும் வறண்டுவிட்டதால், கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலைமையை சமாளிக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவர திட்டமிட்டப்பட்டு உள்ளது. அதற்காக ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.


தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க கூடுதலாக ரூ.200 கோடி நிதியை ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முன்வந்த கேரள அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கேரள அரசு தாமாக முன் வந்து 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதாக தெரிவித்திருத்தது குறிப்பிடத்தக்கது.