3வது அணி? அதிமுக? தனித்து போட்டியா? இன்று தேமுதிக இறுதி முடிவு
மக்களவை தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்க நிர்வாகிகளுடன் தேமுதிக தலைவர் ஆலோசனை.
தமிழகத்தை பொறுத்தவரை வரும் மக்களவை தேர்தலையொட்டி கூட்டணி குறித்து பேச்சுவாரத்தைகள் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகிறது. எந்த கட்சி யாருடன் கூட்டணி? கூட்டணியில் எத்தனை இடங்கள் ஒதுக்கீடு? என்ற உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் இருந்த நிலையில், திமுக தரப்பில் இருந்து கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டதில் இறுதி முடிவாகிவிட்டது. திமுக தொகுதி பங்கீடு நிறைவடைந்து விட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். திமுக கூட்டணியில் மொத்தம் எட்டு கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறத்தில் ஆளும் கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில் இழுக்க தேமுதிகவிடம் இன்னும் பேச்சுவாரத்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே அதிமுக, பாஜக, பாமக, புதிய தமிழகம், என்.ஆர். காங்கிரஸ் என கூட்டணி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாஜக தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவாரத்தைகள் நடத்தி வருகிறது. ஆனால் தொடர்ந்து தேமுதிக மற்றும் அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை முடிவாகிவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று சுதீஷ் நேற்று கூறினார்.
அதிமுக தரப்பில் நான்கு மக்களவை தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் தேமுதிக தரப்பில் பாமகவுக்கு ஒதுக்கியது போல ஏழு மக்களவை இடங்களும், ஒரு ராஜ்ய சபா இடமும் கேட்பதாகத் தெரிகிறது. இதனால் தான் கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது என தகவல்கள் வந்துள்ளது.
இந்தநிலையில், இன்று தேமுதிக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் மக்களவை தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. ஏற்கனவே திமுக தங்களிடம் சீட் இல்லை என்று கூறிவிட்ட நிலையில், அதிமுகவுடன் பேச்சுவாரத்தை நடந்து வருகிறது. ஆனால் தேமுதிகவின் நிபந்தனைகளை அதிமுக ஏற்க்குமா? என்று தெரியவில்லை. அப்படி ஏற்காவிட்டால் மூன்றாவது அணி அமைப்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து தேமுதிக முடிவெடுக்கும் எனத்தெரிகிறது.