சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அமரகுந்தியில் அதிமுக கொடியேற்று விழா மற்றும் பல்வேறு கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது இந்த விழாவில் விழாவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு வெற்றி கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார் அவர் பேசும்போது.  அதிமுக மட்டுமே நாட்டு மக்களுக்கு நல்லது செய்கிற இயக்கமாக உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களால் உருவான இயக்கம். சேலம் மாவட்டம் அதிமுக கோட்டையாக உள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எவ்வளவோ பிரச்சினைகளை கொடுத்தார்கள். 3 ஆக போய்விட்டது என கேலி பேசினார்கள். ஆனால் 2021-ல் 66 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. சில எட்டப்பர்கள் இருந்த காரணத்தால் ஆட்சியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த எட்டப்பர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும். இந்த கட்சியை காட்டிக் கொடுப்பவர்கள், இந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என நினைத்து பிரச்சினை செய்தவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி விட்டார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய தினம் பயிர் வளர களையெடுப்பது போல, களையாக இருந்தவர்கள் அதிமுகவில் இருந்து களையெடுக்கப்பட்டுவிட்டார்கள். எனவே அதிமுக செழித்து வளர்ந்து மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றார். எத்தனையோ மாவட்டங்கள் இருந்தாலும் சேலம் மாவட்டத்தில் தான் அதிமுக இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவை உடைப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். அந்த முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்திற்கு என எந்த திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்திற்கு திறப்பு விழா நடத்துகிறார்கள் என்றார்.  மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி சட்டமன்ற தொகுதிகளில் வறண்ட பகுதியைச் சேர்ந்த 100 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம் அதிமுக ஆட்சியில் ரூ.565 கோடி மதிப்பில தொடங்கப்பட்டது. வேகமாக பணிகள் முடிக்கப்பட்டு 6 ஏரிகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திட்டம் முடக்கப்பட்டு விட்டது. 2 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் பணிகள் நடக்கிறது. விவசாயிகள் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய குடும்பத்தை மட்டுமே கவலைப்படுகிறார். மனசாட்சி உள்ள மனிதராக இருந்தால் விவசாயிகளின் உணர்வை புரிந்து 100 ஏரி நிரப்பும் திட்டத்தை விரைவு படுத்த வேண்டும் என்றார்.


மேலும் படிக்க | தமிழ்நாட்டில் ரயிலை கவிழ்க்க சதி - காவல்துறை தீவிர விசாரணை


திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். தார் சாலை அதிகமுள்ள மாநிலம் என்று தமிழ்நாடு பெயர் எடுக்க அதிமுக ஆட்சியே காரணம். அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் தேசிய விருதுகளை பெற்றோம். ஆனால் திமுக ஆட்சியில் எந்த விருதுகளையும் பெறவில்லை. உள்ளாட்சித் துறையில் மட்டும் 140 விருதுகள் அதிமுக ஆட்சியில் கிடைத்தது. அதிமுக ஆட்சியில் மட்டும் 14 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் திமுக ஆட்சியில் புதிய பேருந்து ஒன்று கூட வாங்கப்படவில்லை. ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக்கல்லூரிகள், 3 கால்நடை மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. ஆயிரம் ஏக்கரில் தலைவாசலில் கால்நடை பூங்கா கொண்டு வரப்பட்டது. ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா கொண்டு சாதாரண விஷயமில்லை.  அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியானது. ரூ.30 ஆயிரம் கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வருவதாக அவர் சொன்னார். இது முதல்வரை சுற்றி சுற்றி வருகிறது. கலால்துறையில் மிகப் பெரிய கொள்ளை நடைபெறுகிறது. 6 ஆயிரம் மதுபானக் கடைகளில் கூடுதலாக பணம் வசூலிப்பதால் ஒரு நாளைக்கு ரூ.10 கோடி கொள்ளையடிக்கப்பட்டு எங்கு போய் சேர வேண்டுமோ அங்கு போய் சேர்கிறது. டெண்டர் விடாமல் 3 ஆயிரம் பார்கள் செயல்படுகின்றன. 24 மணி நேரமும் பார்கள் இயங்குகின்றன என்று குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி 
 
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது செந்தில் பாலாஜி பற்றி விமர்சித்து விட்டு தற்போது அவருக்கு ஆதரவாக பேசுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். உச்சநீதிமன்ற உத்தரவின்படியே செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இதில் பழிவாங்கல் எதுவும் இல்லை. நாட்டு மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. முதலமைச்சர் ஏன் பதறி போய், உடனடியாக போய் பார்க்கிறார். அமைச்சர் துரைமுருகன் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட போது யாரும் போய் பார்க்கவில்லை. ஆனால் செந்தில்பாலாஜியை அனைத்து அமைச்சர்களும் முதல்வர் குடும்பத்தினரும் சென்று பார்க்கின்றனர். ஒரு கைதியாக இருக்கிறவர் அமைச்சராக இருக்க முடியாது. முந்தைய திமுக ஆட்சியில் முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது, ஆலடி அருணா, ராஜா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.அதிமுக ஆட்சியில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதவி நீக்கப்பட்டார்.  ஆனால் இன்றைக்கு கைதியாக இருப்பவரை எதற்காக பாதுகாக்க வேண்டும். மக்கள் எப்படி அரசியல்வாதிகளை மதிப்பார்கள். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை வைத்திருக்க அவர் என்ன தியாகம் செய்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றார்.


திமுக ஆட்சியில் எல்லா துறையும் வளர்ந்து விட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். இந்தியாவிலேயே மோசமான ஆட்சி தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. ஊழல் செய்வதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மக்களைப் பற்றி கவலைப்படாமல், தன் வீட்டில் உள்ள மக்களைப் பற்றியே கவலைப்படுகிறார். அரசப் பரம்பரை போல கருணாநிதி வீட்டில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவிக்கு வாரிசு அரசியல் செய்கிறார்கள் என்றார்.  
அதிமுகவைப் பொறுத்தவரை தொண்டர் ஆளுகின்ற கட்சி. திமுகவைப் போல குடும்ப அரசியல் கிடையாது. திமுகவின் வாரிசு அரசியல் மிகப்பெரிய ஆபத்து. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். உங்கள் ஆட்சி விரைவிலேயே கவிழும். பல பேர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் சாதனை படைத்தது போல தேசிய அரசியலுக்கு ஸ்டாலின் சென்று விட்டார். கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வந்து விட்டார். இங்கேயே திறமையாக ஆட்சி செய்ய முடியாதவர் பிரதமரை எப்படி தேர்ந்தெடுக்க முடியும்.
 
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளித்து திமுகவுக்கு மக்கள் சம்மட்டி அடி அடிப்பார்கள். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்காக எந்த கோரிக்கைக்காகவும் குரல் கொடுக்கவில்லை. காவிரி நதிநீர் பிரச்சினைக்கு 23  நாட்கள் பாராளுமன்றத்தை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடக்கினார்கள். திமுக எம்.பிக்களால் ஒரு நாளாவது பாராளுமன்றத்தை முடக்க முடியுமா. காவிரி பிரச்சினையில் சட்டப் போராட்டம் நடத்தி உரிய தீர்வு காணப்பட்டதாக தெரிவித்தார்.


மேலும் படிக்க | விஷமிகளின் வேலை..! கொதிக்கும் விஷன்.V! நடந்தது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ