6 மாத இழுபறிக்கு பின் மேடவாக்கம் மேம்பால பணி துவங்கியது!
சென்னை மேடவாக்கம் மேம்பால பணிகள், 6 மாத இழுபறிக்கு பின்னர் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது!
சென்னை மேடவாக்கம் மேம்பால பணிகள், 6 மாத இழுபறிக்கு பின்னர் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது!
தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததை அடுத்து, அச்சாலை ஆறு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. ராஜிவ்காந்தி சாலையில் ஐ.டி., நிறுவனங்கள் வருகையால் பெரும்பாக்கம், சோழிங்கநல்லுார், பள்ளிக்கரணை, மேடவாக்கம், மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகின. இதற்கிடையில் வாகன எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்க போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.
இதையடுத்து, தாம்பரம் - வேளச்சேரி சாலையில், சோழிங்கநல்லுார், மாம்பாக்கம், பரங்கிமலை செல்லும் சாலை சந்திப்புக்களை இணைத்து, பிரம்மாண்ட மேம்பாலம் கட்ட, நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது.
இதற்காக, ரூபாய் 146.41 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் ரூபாய் 129.29 கோடி மேம்பால பணிகளுக்கும், 17.12 கோடி ரூபாய், நில ஆர்ஜிதம் செய்யவும் ஒதுக்கப்பட்டது. மேடவாக்கம் மேம்பால திட்டத்தில் தாம்பரம் - -வேளச்சேரி சாலையில், ஜல்லடையான் பேட்டை சந்திப்பில் இருந்து 1 கி.மீ., நீளத்தில், ஒரு பாலமும்; மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லுாரியில் இருந்து, ஜல்லடையான்பேட்டை சந்திப்பு வரை, 2 கி.மீ., நீளத்திற்கு ஒரு பாலமும் அமைக்க திட்டமிடப்பட்டது
திட்டமிட்டபடி, நில ஆர்ஜிதம் முடித்து, கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரியில், 'சன்ஷைன்' என்ற கட்டுமான நிறுவனம், ஒப்பந்தம் எடுத்து, பாலம் கட்டும் பணியை துவக்கியது.
மேம்பால கட்டுமானப் பணி 33% முடிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு மத்தியில், ஒப்பந்த நிறுவனம் பணியை நிறுத்தியது. இதனால், ஆறு மாதங்களுக்கு மேல், இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், புதிய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, தற்போது பணிகள் விறு விறுப்பாக தடைப்பெற்று வருகின்றன. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்,... "மேடவாக்கம் மேம்பால திட்டத்தில், முன்பு இருந்த ஒப்பந்ததாரர், திட்டபணிகளை, உரிய கால கட்டத்திற்குள் நிறைவேற்றவில்லை.
இதனையடுத்து எச்சரிக்கை விடுத்ததால், திடீரென அவர் பணிகளை நிறுத்திவிட்டு வெளியேறினார். அவரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து, மறு ஒப்பந்தம் விடப்பட்டது. இதில், 'ரெனடாஸ்' எனும் நிறுவனம், 98 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தத்தை எடுத்துள்ளது.
தற்போது போர்க்கால அடிப்படையில் நடந்து வரும் மேம்பாலப் பணிகள் 2020-ஆம் ஆண்டிற்குள் பூர்த்தி செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும்" என தெரிவித்தார்.