டாஸ்மாக்கு எதிராக போராடிய பெண்களை கண்மூடித்தனமாக தாக்கிய போலீஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாமளாபுரத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்த 3 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதற்குப் பதிலாக, புதிய மதுக்கடை அமைக்கும் பணி நடந்து வந்தது. இதை எதிர்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸாரும், அதிரடிப் படையினரும் திடீரென தடியடி நடத்தினர். போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கியதில் 3 பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 


அப்பொழுது திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஓங்கி அறைந்ததில் அய்யம் பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண் பலத்த காயமடைந்தார்.


இதைக்குறித்து தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-


திருப்பூரில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை போலீஸ் அதிகாரி மிருகத்தனமாக தாக்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். அந்த போலீஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்.


மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. நெடுஞ்சாலைகளை குறுக்கு சந்துகளாக பெயர் மாற்றி புதிய மதுக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தமிழக அரசு புதிய மதுக்கடைகளை திறக்க கூடாது. அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்.


மதுக்கடைகளுக்கு எதிராக விரைவில் தமிழகம் முழுவதும் பா.ஜனதா போராட்டம் நடத்தும் என கூறினார்.