தேமுதிக பொதுச்செயலாளர்  விஜயகாந்த் அவர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று சந்தித்து பேசினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. விஜயகாந்த் இல்லம் வந்த முதல்வர் பழனிசாமியை, பிரேமலதா மற்றும் சுதிஷ் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.


அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார்.  


இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் உடன் இருந்தனர்.


முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு செல்லும் முதல்வர் பழனிசாமி விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார் எனவும், விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கிறார் எனவும் தகவல்கள் வெளியானது. 


எனினும் தேமுதிக தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதால், தொகுதி பங்கீடு தொடர்பான சந்திப்பாகவே இந்த சந்திப்பு நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


ஏற்கனவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.