அதிமுக பொதுக்குழு கூட்டம் செப். 12 : கழக உறுப்பினர் யாரும் போக வேண்டாம் -எச்சரிக்கும் தினகரன்!!
இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி ஒன்றாக இணைந்த பிறகு கடந்த 28-ம் தேதி இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனர். இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவை > சசிகலா, டிடிவி தினகரன் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செல்லாது. > அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவை விரைவில் கூட்ட முடிவு. > சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவெடுத்து தீர்மானம். > நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி.யை அதிமுக.,வே எடுத்து நடத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் ஆகும்.
மேலும் அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி காலை 10.35 மணியளவில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பொதுக்குழுவை கூட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த பொதுக்குழு கூட்டத்துக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுக்குழு கூட்டத்தில் உண்மை தொண்டர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.