சென்னை: இன்று அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து விவரங்கள் வெளியாகி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்தல் வரும் 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு ஜூலை 1 ஆம் தேதி துவங்கியது. வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஜூலை 11. வாக்கு பதிவு முடிந்தவுடன், அப்பொழுதே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் இருந்து 6 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. அதாவது தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அதிமுகவுக்கு 3 இடங்களும், திமுகவுக்கு 3 இடங்களும் கிடைக்கும். ஒரு மாநிலங்களவை எம்.பி.யைத் தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. எனவே இந்த ஆறு எம்.பி.க்களையும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் எனத்தெரிகிறது.


அதிமுகவுக்கு கிடைக்கும் மூன்று இடங்களில் ஒரு இடம் பாமவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள இரண்டு இடங்களில் யாரை நிறுத்துவது என முடிவெடுப்பதில் அதிமுகவில் நீண்ட நாட்களாக குழப்பம் நீடித்து வந்தது. அனைத்து குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து விவரங்கள் வெளியாகி உள்ளது. 


அதிமுக சார்பில் முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் போட்டியிடுகிறார்கள். சிறுபான்மையினருக்கு மாநிலங்களவையில் இடம் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் முகமது ஜானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மற்றொரு வேட்பாளர் ஆனா சந்திரசேகரன் மேட்டூர் நகர அதிமுக செயலாளராக இருக்கிறார். 


அதேபோல திமுகவைப் பொறுத்தவரை ஒரு இடம் மதிமுகவுக்கு, மற்ற இரண்டு இடங்கள் தங்கள் கட்சி உறுப்பினருக்கும் ஒதுக்கி உள்ளது. அந்தவகையில், தொமுசவின் பொதுச்செயலாளரான சண்முகம் மற்றும் மூத்த வழக்க்றிஞர் வில்சன் ஆகியோ திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். மதிமுக சார்பில் வைகோ போட்டியிடுகிறார். இவர்கள் மூன்று பேரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.