தங்கம் வென்ற கோமதிக்கு ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த அதிமுக!
தோஹாவில் நடைப்பெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது!!
சென்னை: 3-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைப்பற்றது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும். இது அவரது சிறந்த ஓட்ட நேரமாக குறிப்பிடப்படுகிறது.
தங்கப்பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி, தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் வென்ற கோமதிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அவருக்கு சிலர் நிதி உதவியும் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும், அதேபோல வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜ்க்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் அதிமுக சார்பில் அறிவிகப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, நடிகர் விஜய் சேதுபதி ரூ.5 லட்சமும், காமெடி நடிகர் ரோபோ ஷங்கா் ரூ.1 லட்சமும், திமுக சார்பில் ரூ.10 லட்சமும், காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சமும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.