AIADMK அதிரடி: சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்
அதிமுக உறுப்பினர்களுடன் சசிகலா நடத்தும் தொலைபேசி உரையாடல்களை வெறும் `நாடகம்` என்று குறிப்பிட்டதுடன், ஒரு குடும்பத்தின் விருப்பங்களுக்காக கட்சி தன்னை ஒருபோதும் அழித்துக்கொள்ளாது என்று அதிமுக கூறியுள்ளது.
சென்னை: தமிழக அரசியல் களம் பல திருப்பங்களையும் எதிர்பாராத நிகழ்வுகளையும் நம்முன் கொண்டு வருவது வழக்கமான ஒரு விஷயம்தான். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுக்காகத்தான் தற்போது அரசியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அதிமுக-வின் (AIADMK) ஒரு மிகப்பெரும் ஆளுமையாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழி வி.கெ.சசிகலா சிறை சென்றதைத் தொடர்ந்து அவரது அரசியல் வாழ்க்கை ஆட்டம் கண்டது. எனினும், சரியாக தேர்தலுக்கு முன்னால் விடுதலை ஆன அவர் பல அதிர்வலைகளை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வண்ணம் அவர், அரசியலில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்தார்.
எனினும், கடந்த சில நாட்களாக தான் மீண்டும் முழுநேர அரசியலுக்கு வர தயாராக உள்ளதாக அவர் பல வழிகளில் தெளிவுபடுத்தி வருகிறார். தான் மீண்டும் வருவேன் என்றும் கட்சியையும் தன்னையும் பிரிக்க முடியாது என்றும் அவர் பல தொண்டர்களுக்கு தோலைபேசி மூலம் கூறி வருகிறார்.
இந்த நிலையில், வி.கெ.சசிகலாவுடன் பேசி, கட்சிக்கு எதிராக செயல்பட்டதற்காக அதிமுக-வின் 16 உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக இன்று அறிவித்தது.
ALSO READ: TN Assembly: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தேர்வு
ஒரு அறிக்கையில், அதிமுக உறுப்பினர்களுடன் சசிகலா நடத்தும் தொலைபேசி உரையாடல்களை வெறும் "நாடகம்" என்று குறிப்பிட்டதுடன், ஒரு குடும்பத்தின் விருப்பங்களுக்காக கட்சி தன்னை ஒருபோதும் அழித்துக்கொள்ளாது என்று அதிமுக கூறியுள்ளது.
தமிழக சட்டமன்ற (TN Assembly) எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா ஆகியோரை தேர்ந்தெடுக்க, இன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (O Panneerselvam) மற்றும் பிற பதவிகளுக்கான தேர்வு நடைபெற்ற பின்னர், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அனைவரையும் நீக்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதனை அடுத்து, அதிமுக-வின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக, முன்னாள் முதல்வர் பழனிசாமியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய, கள்ளக்குறிச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆனந்தன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. வி.கே. சின்னசாமி, தேனியைச் சேர்ந்த ஏ.கே.எம் அழகர்சாமி, வேலூரைச் சேர்ந்த எல்.கே.எம்.பி. வாசு, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சோமாத்தூர் ஆ. சுப்பிரமணியம், வின்சென்ட் ராஜா, பருத்தியூர் நடராஜன் உள்ளிட்ட 15 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: Tamil Nadu: தமிழகத்தில் இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR