Udhayanidhi Stalin: திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்  தலைமையில் திருச்சி மத்திய, வடக்கு மற்றும் தெற்கு, வடக்கு  மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (ஆக. 27) நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் இரண்டாவது மாநில அளவிலான இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இளைஞர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.


கேலி கூத்தான மாநாடு


மிகச்சிறந்த மாநாடாக இது அமைய வேண்டும். அதேபோல் இளைஞர்கள் எந்த போராட்டத்திலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டாலும் மினிட் புக்கை அனைத்து இளைஞர் அமைப்பினரும் பயன்படுத்த வேண்டும், அதை பராமரிக்க வேண்டும். சமீபத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கையில் தமிழ்நாடு முழுவதும் மூன்றரை லட்சம் இளைஞர்கள் புதிதாக திமுகவில் இணைக்கப்பட்டுள்ளனர்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற ஒரு கேலிக்கூத்தான மாநாட்டை இளைஞர்களாகிய நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கையோ, வரலாறோ எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. வெறும் ஆட்டமும், பாட்டமும் நகைச்சுவையும், கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெற்றது. 


மேலும் படிக்க | மக்களவை தேர்தலில் சுப்பர் ஸ்டாரின் வாய்ஸ் யாருக்கு? - டக்குனு பதில் சொன்ன ரஜினியின் அண்ணன்


எதற்கு இந்த மாநாடு?


அந்த மாநாட்டை நடத்தியவர்களுக்கு ஏன் அந்த மாநாட்டை நடத்தினோம் என்பதும் தெரியவில்லை, அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நாம் ஏன் கலந்து கொண்டோம் என்பதும் தெரியவில்லை. அந்த அளவிற்கு ஒரு கேலி கூத்தான மாநாட்டை மதுரையில் நடத்தி உள்ளனர்.


இந்த மாநாட்டில் கலந்து கொண்ட கட்சித் தொண்டர் மாநாட்டிற்கு அழைத்து வந்த தன்னுடைய மனைவியை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரை பெற்றுக் கொண்டு காவல்துறையும் அவருடைய மனைவியை தேடி வருகிறது. அந்த மாநாட்டிற்கு பொறுப்பாளரான ஜெயக்குமாரிடம் தான் காணாமல் போன மனைவி பற்றி கேட்க வேண்டும்" என்று உதயநிதி கிண்டலாக கூறினார். 


பாஜக அரசின் ஊழல்கள்


தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் தொடர்ந்து நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல போராட்டங்களை திமுகவின் இளைஞர் அணி நடத்தி வருகிறது, இனியும் தொடர்ந்து நடத்தும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் அடிமை அதிமுக, ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு நீட் தேர்வை உள்ளே அனுமதித்துவிட்டது.


பாஜகவின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் சுமார் ஏழரை லட்சம் கோடி மதிப்பிலான ஊழல் செய்துள்ளதாக ஒரு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு கிலோமீட்டர் சாலைக்கு 250 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆறு வழிச்சாலைக்கு அதில் கணக்கு காட்டியுள்ளனர். அதேபோல் ஆயுஷ்மான் பாரத் என்ற ஒன்றிய அரசின் மருத்துவ காப்பீட்டில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் அவர்கள் ஊழல் செய்துள்ளனர்.


அதானி இல்லாமல் பிரதமர் செல்லமாட்டார்


இப்படியே பல திட்டங்களில் லட்சக்கணக்கான கோடிகளில் ஊழல்களை செய்துள்ளனர். ஆனால் பிரதமர் மோடி எந்த கூட்டத்தில் கலந்து கொண்டாலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்தை மட்டுமே குறிவைத்து பேசுகிறார். தமிழ்நாடு முழுவதுமே கருணாநிதியின் குடும்பம் தான் என்பதை இந்த நேரத்தில் நான் பதிவு செய்கிறேன்.


ஒன்றிய அரசின் மிகச்சிறந்த சாதனையாக கடந்த 9 ஆண்டுகள் ஆட்சியில் அதானியின் பல்வேறு தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையான 15 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளது. எனவே பிரதமர் மோடி விமானி இல்லாமல் கூட பறந்து விடுவார், அதானி இல்லாமல் பறக்க மாட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியை திட்டமிட்டு பழி வாங்கிய பாஜக அவருடைய பதவியை பறித்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் இன்று ராகுல் காந்தி நீதிமன்றத்தின் வாயிலாக தன்னுடைய பதவியை மீண்டும் மீட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை 2024ஆம் ஆண்டு தேர்தலிலும் தொடரும், அதற்கான காலம் வந்துவிட்டது.


உதயநிதி சொன்ன குட்டி கதை


இளைஞர் அணியாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு சிறிய கதை சொல்கிறேன். உன் வீட்டிற்குள் விஷ பாம்பு ஒன்று வந்துவிட்டது. அந்தப் பாம்பை அடித்து சாகடிப்பதற்குள் அங்கிருந்து தப்பிச்சென்றது. மீண்டும் இரண்டு நாட்களுக்குப் பிறகு அடிபட்ட அதே பாம்பு வீட்டுக்குள் வந்தது. இது எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்து பார்க்கும் போது வீட்டிற்கு அருகில் இருந்த புதருக்குள் மறைந்திருந்து, மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளது உங்களுக்கு தெரிய வருகிறது. 


இதில் வீடு என்பது தமிழ்நாடு ஆகவும், புதர் என்பது அதிமுகவாகவும், விஷப்பாம்பு என்பது ஒன்றிய பாஜக அரசுமாகவும் உள்ளது. எனவே இந்த விஷப் பாம்பை அகற்ற வேண்டும் என்றால் முதலில் வீட்டிற்கு அருகில் மண்டியுள்ள புதரை அகற்ற வேண்டும். புதரை அகற்றினால் பாம்பும் ஒளிந்து ஓடி விடும். எனவே இளைஞர் அணியின் மாநாடு விஷப் பாம்பை விரட்டக்கூடிய எழுச்சிமிகு மாநாடாக அமைய வேண்டும்" என்றார். 


மேலும் படிக்க | 15 ரூபாயாவது தந்தார்களா... ஊழல் பற்றி பேச பிரதமருக்கு அருகதையில்லை - ஸ்டாலின் தடாலடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ