குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லியில் இன்று சந்தித்துப் பேச வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது இரு அணிகளையும் இணைப்பது குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் ஆளும் அதிமுக தினம் ஒரு பரபரப்பு செய்தியினை மக்களுக்கு அளித்து வருகிறது. 


அந்த வகையில் நேற்று காலை பிரிந்துள்ள அதிமுக-வின் இரண்டு அணிகளையும் இணைப்பது குறித்து பேசுவதற்காக அதிமுக தலைமையகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்து இருந்தார்.


இந்த பேச்சுவார்த்தை இரு அணிகளும் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், ஓ.பி.எஸ். அணியினர் தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து ஆலோசனை நடத்த இருபதாக தெரிய வந்தது.


மேலும் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் நியமனம் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டார். மேலும் சசிகலா நியமித்தது செல்லாது என்று அறிவிக்கப்பட்டதுடன் அந்த அறிவிப்பில் முதல்வர், அமைச்சர்கள் மொத்தம் 27 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.


சசிகலாவின் நியமனங்களையும், டிடிவி தினகரனையும் ஏற்கப் போவதில்லை என்ற அறிவிப்பைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றிணைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


முன்னதாக இன்று குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு பதவியேற்ப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றனர்.


பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு, அணிகள் இணைப்பு குறித்து நேருக்கு நேர் சந்தித்துப் பேச வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. டெல்லியிலேயே அனைத்து விஷயங்களையும் தீர்மானித்து விட்டு அதனை சென்னைக்கு வந்து செயல்படுத்திட முடிவு செய்திருப்பதாக அதிமுக அம்மா அணி வட்டாரங்கள் தெரிவித்தன.


சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சசிகலாவின் நியமனம் செல்லாது என்ற உத்தரவு வரும் என அதிமுக அம்மா அணி நம்புகிறது. 


இதன் பிறகு, புதிதாக ஒருவரை பொதுச் செயலாளராகத் தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது இரு அணிகள் இணைப்புக்குப் பிறகு, ஒரு குழுவை அமைத்து கட்சியை வழிநடத்தலாம் என்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


இதற்கான அத்தனை விடைகளும் இரு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் டெல்லியில் இருந்து திரும்பியவுடன் கிடைத்து விடும் என்பதே அதிமுக தரப்பில் இருந்து தரப்படும் தகவலாக உள்ளது.