அதிமுகவின் இரட்டை தலைமையாக ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் திகழ்ந்து வந்த நிலையில் திடீரென அக்கட்சியில் ஒற்றைத் தலைமை கோரிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக மாற ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் முயற்சிப்பதால் உட்கட்சி குழப்பம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவர் மீதும் அக்கட்சியின் சூளூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை விளாங்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஆறுகுட்டி அதிமுகவின் தொண்டனாக சில கருத்துக்களை பகிர்ந்துகொள்வதாக தெரிவித்தார். அவரது பேச்சின் சாராம்சம் பின்வருமாறு:-


அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் நடத்தப்படவில்லை. திமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்துள்ளது. முன்கூட்டியே உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருந்தால் ஆட்சி கையைவிட்டு போயிருக்காது. ஒரு விபத்தின் காரணமாக பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தற்போது இரண்டு கோஷ்டிகளாக சண்டை போட்டுக்கொண்டுள்ளனர். 


உள்ளாட்சி தேர்தலில் தாங்கள் இருக்கும் வார்டுகளை கூட ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரால் கைப்பற்ற முடியவில்லை. ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தற்போது சாதி கட்சியாகிவிட்டது. அதிமுக துரோக கட்சியாக மாறி விட்டது. மேல் இருந்து கீழே வரை அனைத்தும் மாறிவிட்டது. ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் இயக்கத்தையே காணமல் ஆக்கிவிட்டனர். 


மேலும் படிக்க | இபிஎஸ்ஸூக்கு உற்சாக வரவேற்பு - ஓபிஎஸ் மீண்டும் ஆலோசனை


எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சுத்தமானவர்கள் இல்லை. கீழ் இருந்து கட்சியில் மேல் வரை வந்த எனக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. என்னுடன் கட்சி நிர்வாகிகள் யாரும் பேசாததால் நான் ஒதுங்கிவிட்டேன். அதிமுகவினர் வேதனையில் உள்ளனர். தலைமை பொறுப்பில் இருந்து இருவரும் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். நன்றி மறந்தவர்களாக உள்ளனர் வேறு யாராவது தலைமை பொறுப்புக்கு வர வேண்டும். 


ஜெயலலிதா இருந்தபோது இருந்த மாதிரி கட்சி இல்லை. எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதியான அன்வர் ராஜாவை கட்சியில் இருந்து நீக்குகிறார்கள். அவர் என்ன செய்தார் கட்சிக்காக பேசியவரை நீக்குவது நியாயமா? இப்போது பேட்டி கொடுத்ததால் என்னையும் கட்சியை விட்டு நீக்குங்கள். எடப்பாடி பழனிசாமி கையை பிடித்து முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவை ஏன் மோசமாக பேச வேண்டும். தற்போதைய நிலையில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவருக்குமே கட்சியில் ஆதரவு இல்லை. ஒ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் மக்கள் தலைவர்கள் கிடையாது மாவட்ட தலைவர்கள். 


அதிமுக பல்வேறு சோதனைகளை கடந்து வந்த கட்சி. இவர்கள் இருவரும் இனி சேர்ந்து இயங்க வாய்ப்பில்லை. பிரதமர் கூறியதால் தான் துணை முதல்வர் பதவி ஏற்றேன் என ஒ.பி.எஸ் வெளிப்படையாக பேசி இருக்க கூடாது. அதிமுக சாதி கட்சியாக இரு பிரிவினருக்கான சாதிக்கட்சியாக மாறிவிட்டது. இது போன்ற நிலை கட்சிக்கு  வரும் என எதிர்பார்த்தேன்  வந்துவிட்டது. இவ்வாறு முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | 'ஜெயிலர்' வேடத்தில் மிரட்டும் அண்ணாத்த! - வெளியானது Thalaivar 169 டைட்டில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR