அதிமுக இணைப்பு: பேச்சு நடத்த இரு தரப்பிலும் குழு அமைப்பு
அதிமுக அணிகள் இணைப்பு குறித்து பேச்சு நடத்த இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரு அணிகள் உதயமான நிலையில், மீண்டும் ஒன்றாக இணையும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை, கட்சியில் இருந்து சசிகலா, தினகரன் குடும்பத்தினரை முழுவதுமாக நீக்குவது என்பதுதான் ஓபிஎஸ் தரப்பின் பிரதான கோரிக்கை. இதை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
எடப்பாடி அணியின் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., ‘‘எந்த நிபந்தனையும் இல்லாமல் திறந்த மனதுடன் பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம்’’ என்றார்.
இந்த நிலையில், சென்னை ராயப் பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று காலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதைத் தொடர்ந்து, முதலில் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பது, அதன்பிறகு, ஓபிஎஸ் அணியுடன் பேசி முடிவெடுப்பது என்று தீர் மானிக்கப்பட்டது. இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடத்த வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் 2-வது நாளாக நேற்றும் ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை நடத்தினார். சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்காதவரை, பேச்சுவார்த்தைக்கு போகக்கூடாது என பலர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆலோசனைக்குப் பிறகு, கே.பி.முனுசாமி தலைமையில் சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், க.பாண்டியராஜன், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கொண்ட 7 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த இரு அணிகளுகு இடையிலான பேச்சுவார்த்தை நாளை மறுநாள் தொடங்குகிறது.