DMK தேர்தல் அறிக்கை திருத்தம்: அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி!!
அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி....
அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி....
தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க திமுக தயாராகி வருகிறது. இத்தேர்தலில் தமிழகத்தில் அதிமுக-பாஜக-பாமக கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
தமிழகத்தை பொருத்த வரை மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்கள் தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இந்தநிலையில், இன்று திமுக தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், சிறு, குறு விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனும் முழுமையாக ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நேற்று சென்னை அண்ணா அறிவாலத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், நீட் தேர்வு ரத்து, ஒன்றரை கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேயுர் அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இன்று திருவாரூரில் தேர்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், திருக்காரவாசலில் விவசாயிகள் மத்தியில் பேசினார். அப்போது, "வரும் தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்தால், அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்" என்று அறிவித்தார்.
முன்னதாக, சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.