மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக – பாமக – பாஜக கூட்டணி நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.


தேமுதிகவுடன் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜகவுக்கு ஒதுக்கியது போக மீதம் 28 தொகுதிகள் இருக்கின்றன. இவற்றை பங்கீடு செய்வதில் கருத்தொற்றுமை எட்டப்படவில்லை.


இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான ஏற்பாட்டுகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், திருத்தத்திற்காக சிறப்பு முகாம்களும் நடைபெற உள்ளன. இந்நிலையில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 9 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று பிற்பகலில் ஆலோசனை நடத்த உள்ளார்.


வாக்காளர் பட்டியல், மக்களவை தேர்தல் பணிகள், அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றியும் அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.