மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து நேரில் விசாரிக்க இன்று சென்னை வருகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 22-ம் தேதி முதல் ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டு வருகிறது.முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவ குழுவினருடன், லண்டனில் இருந்துவந்த மருத்துவர் ரிச்சர்டு ஜான்பீலே, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின்  நிபுணர் மருத்துவர் கில்நானி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.


காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா எம்பி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் உள்ளிட்ட பலர் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.


டெல்லியில் இருந்து பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை வருகிறார்கள்.