“எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷனாகி விட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால், உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்” என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். திமுக, காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகள் அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். இந்நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் அமித்ஷாவிற்கு ஆதரவாக பேசி உள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க - அரசியல் என்பது சினிமா இல்லை; 1 வாரம் வந்து போவதற்கு! மீண்டும் விஜய்யை தாக்கிய திமுக அமைச்சர்!


"அரசியலமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின் போது மாநிலங்களவையில் 17.12.2024 அன்று உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாளாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரை மட்டும் கூறி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்காமல் ஏமாற்றி வரும் இண்டி கூட்டணி கட்சிகளை அம்பலப்படுத்தினார். ஆனால், அமித்ஷா பேசியதை திரித்து வழக்கம்போல அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இது கடும் கண்டனத்திற்குரியது. டாக்டர் அம்பேத்கரை தேர்தலில் தோற்கடித்த கட்சி காங்கிரஸ். டாக்டர் அம்பேத்கருக்கு தேர்தல் ஏஜெண்டாக பணியாற்றி கட்சி ஜனசங்கம்.


மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது பண்டிட் ஜவஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும் தனக்கு தானே, 'பாரத் ரத்னா' விருது கொடுத்து கொண்டனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மாபெரும் அறிவுசார் இயக்கத்தை நடத்திய ஒப்பற்ற தலைவர் டாக்டர் அம்பேத்கருக்கு 'பாரத் ரத்னா' விருது கொடுக்க இந்தியாவை 55 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு மனமில்லை. 1990ல் பாஜக ஆதரவுடன் அமைந்த ஆட்சியில்தான் டாக்டர் அம்பேத்கருக்கு 'பாரத் ரத்னா' விருது வழங்கப்பட்டது. ஜனசங்க கால கட்டம் முதலே டாக்டர் அம்பேத்கரை பாஜக போற்றி வருகிறது. 1983ம் ஆண்டு சென்னை பெரம்பூர் ஐசிஎப் வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையை, ஆர்எஸ்எஸ் தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் நிறுவியது. அதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திறந்து வைத்தார்.


கடந்த 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு டாக்டர் அம்பேத்கர் பிறந்த இடம், மறைந்த இடம், வாழ்ந்த இடம் என அவர் தொடர்புடைய ஐந்து இடங்களை பிரம்மாண்டமாகன நினைவிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. லண்டனில் டாக்டர் அம்பேத்கர் தங்கிய இல்லத்தை வாங்கி அதை நினைவிடமாக்கியதும் மோடி அரசுதான். டாக்டர் அம்பேத்கரை உண்மையிலேயே மதிப்பவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்க வேண்டும். பாஜகவுக்கு மூன்று முறை குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறை சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த அப்துல் கலாம், இரண்டாம் முறை பட்டியலினத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் ஆகியோரை குடியரசுத் தலைவர்களாக்கியது பாஜக அரசு.


இப்போது மூன்றாவது முறை கிடைத்த வாய்ப்பில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்மணியை பாஜக குடியரசுத் தலைவராக்கியுள்ளது. இதுதான் உண்மையிலேயே டாக்டர் அம்பேத்கரை போற்றுவது. முதல் முறையாக ஒடிசா மாநிலத்தை ஆளும் வாய்ப்பு பாஜகவுக்கு கிடைத்ததும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்கியுள்ளது. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களை பாஜக துணை முதல்வராக்கியுள்ளது. டாக்டர் அம்பேத்கருக்கு பிறகு, பட்டியலினத்தைச் சேர்ந்தவரை இப்போது மத்திய சட்ட அமைச்சராக்கியுள்ளது பாஜக அரசு. மத்திய அமைச்சரவையில் பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதும் மோடி அரசில்தான். இதுதான் உண்மையிலேயே டாக்டர் அம்பேத்கரை போற்றுவது.


காங்கிரஸ் நினைத்திருந்தால் 2004, 2009ல் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் ஆக்கியிருக்கலாம். ஆனால், வாய்ப்பிருந்தும் அதைச் செய்யவில்லை. கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தவர்களின் வாக்குகளைப் பெற்று பல முறை ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் ஒருமுறை கூட பட்டியலினத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக்கவில்லை. இதுதான் டாக்டர் அம்பேத்கரை மதிப்பதா? மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் என செய்திகள் வெளியாக தொடங்கியதும் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரையும் துணை முதலமைச்சராக்க வேண்டும் என நான் கோரிக்கை விடுத்தேன். பலரும் வலியுறுத்தினர். ஆனால், மகனை மட்டுமே துணை முதலமைச்சராக்கினார் மு.க.ஸ்டாலின்.  இதுதான் டாக்டர் அம்பேத்கரை மதிப்பதா?


பட்டியலின மக்கள் தங்களுக்குத் தேவையானதை தாங்களே செய்து கொள்ள அவர்களுக்கு அரசியல் அதிகாரம் தேவை. அதுவே அவர்களுக்கு உண்மையான விடுதலையை தரும். ஆனால், காங்கிரஸ் கட்சியும், திமுகவும் பட்டியலின மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க மறுக்கிறது. பட்டியலின மக்களை தொடர்ந்து வாங்கும் இடத்திலேயே வைத்திருக்க விரும்புகிறது. கொடுக்கும் இடத்திற்கு வர விடுவதில்லை. டாக்டர் அம்பேத்கர் மீது திமுகவுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உண்மையிலேயே மதிப்பும், மரியாதையும் இருந்தால் உடனடியாக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதலமைச்சராக்க வேண்டும்.


திமுக பொதுச்செயலாளராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும். நிதி, உள்துறை, தொழில், வருவாய், நெடுஞ்சாலை, பொதுப்பணி, இந்து சமய அறநிலையத்துறை போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களாக பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும். இதை செய்யாமல், மத்திய உள்துறை அமைச்சர் இண்டி கூட்டணியை அம்பலப்படுத்தும் வகையில் பேசியதை திரித்து, வெற்றுக் கூச்சல் போடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. யார் டாக்டர் அம்பேத்கரை போற்றுபவர்கள், யார் டாக்டர் அம்பேத்கர் வழி நடந்து பட்டியலின மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குபவர்கள் என்பது பட்டியலின மக்களுக்குத் தெரியும். மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துபவர்களுக்கு பட்டியலின மக்கள் உரிய நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க - Important Order | இரட்டை இலை யாருக்கு? ஒரு வாரத்தில் முக்கிய உத்தரவு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ