``வாட்ஸ் அப்பில் அம்மா குரல்` -ஜெயலலிதா
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தமாதம் 16ம் தேதி நடைபெற இருக்கிறது. ஆளும்கட்சியின் சாதனைகளைக் கூறி மீண்டும் அதிமுகவுக்கே வாக்களிக்கும் படி அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதா வாக்கு சேகரிக்கும் வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவி வருகிறது. இதை பயன்படுத்தி கட்சித் தலைவர்களும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வாக்காளர்களைக் கவர பல்வேறு பிரச்சார யுக்திகளையும் கட்சிகள் கையாண்டு வருகின்றன. தொலைக்காட்சி விளம்பரம், வாட்ஸ் அப், பேஸ்புக் என சமூகவலைதளப் பக்கங்களில் தங்களது பிரச்சாரத்திற்கான களமாக அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்கும் வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் ஜெயலலிதா பேசுவதாவது "வணக்கம் உங்கள் அன்புள்ள அம்மா பேசுகிறேன்" மின்சார உற்பத்தியில் திமுக அரசோடு ஒப்பிட்டு, அதிமுக அரசு செய்த சாதனைகளை எடுத்துக் கூறி, இரு கரங்களையும் கூப்பி வாக்காளர்களிடம் வாக்கு கேட்கிறார் ஜெயலலிதா.
அதில் நினைவிருக்கிறதா உங்களுக்கு 15 மணி நேரம் மின்வெட்டு. பிள்ளைகள் படிக்கவும் முடியவில்லை. தொழில்கள் எல்லாம் முடங்கின. துன்பங்கள்தான் பெருகின. அது திமுக ஆட்சி காலம். இப்பொழுது தமிழகம் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாடு மின் மிகை மாநிலம் ஆகியுள்ளது. எங்கும் எப்பொழுதும் எல்லோருக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. இந்த மகத்தான சாதனை தொடர வாக்களிப்பீர் "இரட்டை இலை சின்னத்திற்கே" நன்றி வணக்கம் என வீடியோ முடிகிறது.
ஏற்கனவே கடந்தாண்டு கடும் வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்தபோது, இதேபோன்று ஆடியோ ஒன்று வெளியானது. அதில் ஜெயலலிதா பேசுவது போன்ற "உங்கள் அன்புச் சகோதரி பேசுகிறேன்.." எனப் பேசியிருந்தார்.