பேரறிஞர் அண்ணாவின் 50ஆவது நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 313 கோவில்களில் சமபந்தி விருந்து நடைபெற்றது. சென்னை கே.கே.நகரில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 50ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திராவிடக் கட்சித் தலைவர்கள் பலரும் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர். அந்த வகையில், முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் மெரினாவில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் சமபந்தி விருந்தில் பங்கேற்று உணவு உண்டார்.


அடையாறில் உள்ள அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.


பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்றார். மேலும் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள கச்சாலீசுவரர் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட சமபந்தி விருந்தில் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும், மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவும் கலந்து கொண்டனர்.


சென்னையின் கே.கே.நகர் பகுதியில் நடைபெற்ற விருந்து நிகழ்வில் முதல்வர் பழனிசாமியும், திருவான்மியூர் பகுதியில் நடைபெற்ற விழாவில் துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொண்டனர்.