பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா விலகல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயர் கல்வித்துறை அதிகாரிகளுடனான கருத்து வேறுபாடு காரணமாக ஆண்டு தோறும் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் தன்னை விடுவித்துக்கொண்டுள்ளது.


தமிழ்நாடு பொறியியல் படிப்பு சேர்க்கை குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா செயல்பட்டு வந்தார். இதனிடையே தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கமிட்டியில் ஒரு உறுப்பினராக இதுவரை செயல்பட்டு வந்த உயர்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் மங்கத் ராம் ஷர்மா தன்னை கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக அறிவித்துக்கொண்டார்.


இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கமிட்டியின் தலைவர் மற்றும் தமிழ்நாடு பொது முதுகலை மாணவர் சேர்க்கை கமிட்டிகளின் தலைவர் பதவிகளில் இருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா ராஜினாமா செய்துள்ளார். தமது ராஜினாமா கடிதத்தை உயர்கல்வித்துறை செயலகத்திற்கும் சுரப்பா அனுப்பியுள்ளார்.


இதையடுத்து, 2019 - 2020 -ஆம் ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வை நடத்துவதில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் விலகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் விலகல் காரணமாக 2019 - 2020 -ஆம் ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் நடத்தவுள்ளது.


தமிழகம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மற்றும் நுழைவுத்தேர்வை கடந்த 22 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. கடந்த ஆண்டுகளில், பல்வேறு மேம்பட்ட முறைகளில் ஒற்றைச்சாளர முறையில் பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்துள்ளது. குறிப்பாக, ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடத்தும் புதிய முறையை கடந்த ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்தது.


இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், உயர்கல்வித்துறை செயலகத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொறியியல் கலந்தாய்வு நடத்துவதில் இருந்து தற்போது அண்ணா பல்கலைக்கழகம் விலகிக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.