அண்ணா பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள் முறைகேடு விவகாரம் தொடர்பாக தற்காலிக ஊழியர்கள் 37 பேர் அதிரடி பணி நீக்கம் செய்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2017-18 ஆம் கல்வியாண்டு தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், மாணவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு விடைத்தாள்களை மாற்றி வைத்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தேர்வு காலங்களில் அலுவலக உதவியாளர்களாக தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் துணையுடன் இந்த முறைகேடு நடந்துள்ளது. 


இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள், 40 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில் மாணவர்கள் ஓரிரு பக்கங்கள் மட்டும் பதில் எழுதி விட்டு, மற்ற பக்கங்களில் எதுவும் எழுதாமல் விடைத்தாள்களை கொடுத்துள்ளனர். அந்த விடைத்தாளை, தேர்வு முடிந்து ஓரிரு நாட்களுக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் அலுவலக உதவியாளர்கள் கொடுத்துள்ளனர். எழுதப்படாமல் விட்ட பக்கங்களில் சரியான விடைகளை நிரப்பி, அந்த மாணவர்கள் அலுவலக உதவியாளரிடம் கொடுத்துள்ளனர். 


இதற்காக தேர்வு எழுதிய மாணவர்களிடம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக உதவியாளர்கள் வாங்கி இருக்கின்றனர். இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டது. விசாரணையின் முடிவில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 37 தற்காலிகப் பணியாளர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பது உறுதியானது.


இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, சேலம், மதுரை உள்பட 5 மண்டலங்களைச் சேர்ந்த 37 தற்காலிகப் பணியாளர்களை பணி நீக்கம் செய்து பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.