`இந்த 3 விஷயங்களை செயல்படுத்துங்கள்` - ஸ்டாலினுக்கு அண்ணாமலை சொல்லும் அட்வைஸ்
கோவை சம்பவத்தை போன்று வேறு சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை வழங்க கடமைப்பட்டுள்ளதாக அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார்.
காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது.
பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர்.
இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, இன்று நடந்த வெடிவிபத்து விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் என்ஐஏ அமைப்பு விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளார். இந்நிலையில், இதை வரவேற்பதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்ட பதிவுகளில்,"கோவை தற்கொலைப் படை தாக்குதலின் விசாரணையை தமிழக முதல்வர் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை பாஜக வரவேற்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம்
1) தேச விரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குங்கள்.
2) தமிழக காவல்துறையின் உளவுத்துறை உலக புகழ் பெற்றது. சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் தொடர் தோல்விகளுக்குப் பின்பு உளவுத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக முன்னெடுங்கள்.
3) திமுகவினர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு காவல்துறையினரை பயன்படுத்தாமல், தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்.
நீங்கள் பதவி ஏற்கும் போது அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று அரசை நடத்துவீர்கள் என்ற உறுதிமொழியை அளித்தீர்கள். மேல் குறிப்பிட்ட ஆலோசனைகளை நீங்கள் நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம். தேசத்தின் நன்மையை கருத்தில் கொண்டு நீங்கள் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் தமிழக பாஜக உறுதுணையாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | நயன் - விக்கி வாடகைத்தாய் விவகாரம் : வெளியானது விசாரணை அறிக்கை... பரபரப்பு தகவல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ