Latest Tamil Nadu News: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,"திருச்சியில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் சர்வதேச விமான நிலைய புதிய கட்டடத்தை பிரதமர் வருகின்ற 2ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை" என்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட மாநில தொழிலாளர்கள் குறித்து தயாநிதி மாறன் பேசியது சர்ச்சையாகி உள்ளது குறித்த கேள்விக்கு,"தயாநிதி மாறன் ஒன்று தெரியாமல் சொல்லிவிட்டேன் அல்லது மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினால் அது முடிவுக்கு வந்துவிடும். ஏற்கனவே வட மாநில தொழிலாளர்கள் குறித்து நான் பேசியபோது என் மீது எஃப்ஐஆர் போடப்பட்டது. அப்படியானால் நடுநிலையோடு காவல்துறை செயல்பட்டால் முதலமைச்சர், தயாநிதி மாறன், டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர வேண்டும்.


'இதுதான் திராவிட மாடல்  அரசா?'


கூட்டணியில் சேர்ந்த பிறகு அதில் இருக்கும் முரண்பாடுகளை காண்பிப்பதற்காக யாரோ ஒருவர் உருவாக்கியது தான் தற்போது வைரலாகும் இந்த விவகாரம். திமுகவின் முகமே இப்படிதான். கடந்த சில வருடங்களாக உத்தரப் பிரதேசத்தை மோசமாக பேசி வந்தனர். ஆனால் பொருளாதார ரீதியாக உத்தர பிரதேச மாநிலம் இரண்டாவது இடத்தில் தற்போது இருக்கிறது. திமுக கண்ணாடியில் தங்களது முகத்தை பார்க்க வேண்டும். மற்ற மாநிலத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது, தமிழகத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதனை ஆராய வேண்டும்.


மேலும் படிக்க | பேரிடரே இல்லை என்றவர் அதை ஆய்வு செய்ய வருகிறார்... உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!


ஒரு நிறுவனம் தமிழகத்திற்கு வரும்போது பத்து சதவீதம் கொடுங்கள், 20 சதவீதம் கொடுங்கள் என்று இங்கு உள்ள ஊழலால் தான் தற்போது தமிழகம் பின்னுக்கு தள்ளப்படுகிறது. இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. திமுக அரசு தங்களை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும். திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் 7.5 லட்சம் கோடி ரூபாய் அதிக கடனை பெற்றுள்ளது, இதுதான் திராவிட மாடல்  அரசா? இதை அத்தனையும் மறைத்து விட்டு INDI கூட்டணியில் இருக்கிறோம் என்றால் முரண்பாடுகள் உள்ள கட்சிகள் எப்படி ஏற்றுக் கொள்ளும்.


தூத்துக்குடி வெள்ளம் வந்தது ஏன்?


புயல் மற்றும் பெருமழையால் சேதமடைந்த நிலையில் மத்திய அரசு கண்டிப்பாக நிவாரணம் வழங்கும்.  அந்த நிவாரணத்தை வாங்கி மக்களிடம் கொடுத்து விட்டால் எல்லாம் சரி என்று திமுக அரசு நினைப்பது தவறு. நான்கு மாவட்டங்கள் முற்றிலுமாக பொருளாதார ரீதியாக பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.


தூத்துக்குடியில் உள்ள உப்பளங்கள் ஏறத்தாழ 90% முற்றிலும் வீணாகிவிட்டது. மீண்டும் தூத்துக்குடியில் பழைய நிலைமைக்கு உப்பு உற்பத்தி கொண்டு வர இரண்டு ஆண்டுகள் ஆகும். தற்போது நிவாரணம் கொடுத்தால் போதும் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு மழையும் புயலும் தமிழகத்தை ஆறு மாதம் பொருளாதார ரீதியாக பின்னுக்கு கொண்டு செல்கிறது. தூத்துக்குடியில் பக்கிங்கம் கால்வாய் 120 அடி இருந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வாயிலாக அதனை 20 அடியாக மாற்றியுள்ளனர். இதனால்தான் பெருவெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் வெளியே கொப்பளிக்கிறது.


மத்திய அரசின் மீது பழி போடுகிறார்கள்


தமிழக அரசு உள்ளபடி வெள்ளம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால் தூத்துக்குடியில் பக்கிம் கால்வாயை மீண்டும் அகலப்படுத்த வேண்டும். வெள்ளம் ஏற்படும்போது அதனை எப்படி சரி செய்வது என்பதனை யோசிக்காது மத்திய அரசை எப்படி குறை கூறலாம் என்று காலை முதல் மாலை வரை திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சென்னை வெள்ளம் மற்றும் தென் மாவட்ட வெள்ளத்தால் தமிழக அரசிற்கு படிப்பினை இல்லை. எப்படி மத்திய அரசின் மீது பழி போடலாம் என்பதை மட்டுமே யோசித்து வருகிறார்கள்.


மேலும் படிக்க | மக்களுக்கு பொங்கல் திருநாளில் நல்ல செய்தி... அதுவும் முதலமைச்சர் கைகளால்!


டிசம்பர் 12, 13ஆம் தேதிகளில் கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்ட போதும் கனமழை வரப்போகிறது என்று தெரிந்தும் எந்தவித உதவியையும் மத்திய அரசிடம் தமிழகத்தில் இருப்பவர்கள் கேட்கவில்லை. நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் தென் மாவட்டங்களில் இப்படி பிரச்சனை இருக்கிறது என்பதனை உணர்ந்து அவராக முன்வந்து உள்துறை அமைச்சர் சந்தித்து பேசி ஹெலிகாப்டர்கள் போன்ற உதவியை செய்திருக்கிறார். 


உதவிகளுக்கு வழிவகை செய்தவர் நிர்மலா சீதாராமன்


INDI கூட்டணிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போகின்ற போக்கில் பிரதமரை பார்த்து வந்திருக்கிறார். ஆனால் நிர்மலா சீதாராமன் தானாக இந்த பிரச்சினையை கையில் எடுத்து கொண்டு தேசிய பேரிடர் மையத்தை தொடர்பு கொண்டு முழுமையான உதவிகளை செய்ய வழிவகை செய்துள்ளார். எப்படி அவரை நாம் குறை கூற முடியும்?


உதயநிதி ஸ்டாலின் இன்னும் மேலே வரவேண்டும். அரசியலில் நல்ல பொறுப்புகளுக்கு வரவேண்டும், அவர் கவனமாக பேச வேண்டும் என்றுதான் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதனை நீங்கள் நன்கு உற்றுப் பாருங்கள். பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களுக்கு புயல் மழை போன்ற வேலைகளில் எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளோம்?, பாஜக ஆளாத மாநிலங்களில் புயல் மழையின் போது என்ன நிதி ஒதுக்கி உள்ளோம் என்கிற விவரங்களை நான் இன்று முகநூலில் பதிவிட இருக்கிறேன்.


மேலும் படிக்க | முதல்வர் ஸ்டாலினை அழைத்து பேசிய பிரதமர் மோடி... முழு பின்னணி இதோ!


'Go Back Stalin'


எதற்காக நீங்கள் இங்கு ஆட்சி செய்கிறீர்கள் என்று கேட்டால் பிஜேபி அரசிடம் இருந்து நிதி வாங்கி தர என கூறினார்களாம். அதற்கு நேரடியாக பாஜக அரசு தமிழகத்தில் இருக்கலாமே. இதை அனைத்தையும் பார்த்து தமிழக மக்கள் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். Go back modi என்கிற மோசமான அரசியலை திமுகவின் ஐடி விங், முதலமைச்சர், கனிமொழி உள்ளிட்ட அனைவருமே 2019ல் நடத்தினர். இன்று திமுக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தை விட்டு எங்கு வெளியே சென்றாலும் Go back Stalin என்பதை ட்ரண்ட் செய்கிறார்கள்.


பிரதமர் அவர்கள் தமிழகத்திற்கு வரும்போது வணக்கம் மோடி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகும். அதே சமயம் திமுக ஐடி விங் சார்பாக #gobackmodi என்று பிரபலம் செய்வார்கள். இதுதான் அவர்களுடைய வேலை. 


திமுக ஐடி விங் தலைவர் டிஆர்பி ராஜாவிடம் சவால் விடுகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை மட்டுமல்ல எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அவருக்கு எதிராக #gobackstalin என்று எங்களால் பிரபலப்படுத்த முடியும் இந்த சவாலுக்கு டிஆர்பி ராஜா ரெடியா என்று கேட்டு சொல்லுங்கள். X தளத்தைப் பற்றி எங்களுக்கு யாரும் எடுத்துரைக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதிலேயே நாங்கள் கம்பு சுத்துற வேலையெல்லாம் பார்ப்போம். எங்களை பொறுத்தவரை எங்கள் மாநில முதல்வரை நாங்கள் அவமானப்படுத்த மாட்டோம். 


வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே சமயம் யாத்திரை தொடர்பான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. களப்பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் மைய பகுதியாக இருக்கக்கூடிய திருச்சியை தலைநகரமாக மாற்றுவது என்பது குறித்து அதற்கான நேரம் வரும்போது பேசலாம்" என்றார்.


மேலும் படிக்க | 'உதயநிதி ஸ்டாலின் ஒன்றும் கருணாநிதி இல்லை... கத்துக்குட்டிதான்' - எல்.முருகன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ