அண்ணாமலை வெளியிடப்போவது திமுக முக்கிய புள்ளிகளின் ஊழல் பட்டியலா? சொத்து பட்டியலா?
திமுக முக்கியப் புள்ளிகளின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இப்போது சொத்து பட்டியலை வெளியிடப்போவதாக கூறப்படுகிறது. இது ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் சம்பந்தப்பட்டவர்களால் கொடுக்கப்பட்ட தகவல் என்பதால் இதில் புதிதாக என்ன இருக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்ணாமலை அறிவிப்பு
தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை, கடந்த மாதம் தென்காசியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது திமுகவினர் ஊழல் பட்டியில் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என கூறினார். குறிப்பாக, திமுகவின் முக்கிய புள்ளிகளின் ஊழல் குறித்த விவரங்கள் ஆதாரங்களுடன் தமிழக மக்களிடையே வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார். தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் சித்திரை திருநாளான்று காலை 10.15 மணிக்கு திமுக முக்கிய நிர்வாகிகள் 17 பேரின் சொத்துப் பட்டியல் வெளியாகும் என தெரிவித்துள்ளார். அவை DMK files என்ற வெப்சைட்டில் பிரத்யேகமாக வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவினர் கேள்வி
அண்ணாமலை திமுக முக்கிய நிர்வாகிகளின் சொத்துப் பட்டியலை வெளியிடப்போகிறாரா? அல்லது ஊழல் பட்டியலை வெளியிடப்போகிறாரா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர். இதற்கு முன்பு திமுகவினரை ஊழலை அம்பலப்படுத்தப்போகிறேன் என தெரிவித்திருந்த அவர், இப்போது சொத்து பட்டியலை வெளியிடப்போகிறேன் என கூறுகிறாரே என கேள்வி எழுப்பியிருக்கும் திமுகவினர், சொத்து பட்டியல் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் சம்பந்தப்பட்ட நபர்களே கொடுத்திருப்பதால் இதில் புதிய தகவல் என்ன இருக்கப்போகிறது? அப்படி புதிய சொத்துப் பட்டியல் அல்லது ஊழல் பட்டியலை வெளியிட்டால் அதனை தகுந்த ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவாரா? என்ற அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பியிருக்கின்றனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு இல்லை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் குறித்த சொத்துப் பட்டியலை வெளியிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்ப இருக்கும் நிலையில் இதற்கான ஏற்பாடுகள் கமலாலயத்தில் செய்யப்பட்டிருக்கின்றன. காலை 10.15 மணிக்கு சென்னை தியாகராயநகரில் இருக்கும் பாஜக அலுவலகத்தில் திமுக முக்கிய புள்ளிகள் 17 பேரின் சொத்துப் பட்டியல் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அகன்ற திரையில் ஒளிபரப்பப்படும். இதில் பாஜக நிர்வாகிகள் மட்டும் பார்க்க உள்ளனர். பின்னர் அண்ணாமலை நிர்வாகிகள் மத்தியில் இது குறித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. நேரடி பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை. திமுகவினரின் ஊழல்களை அம்பலப்படுத்த இருக்கும் அண்ணாமலை, ஏன் நேரடி பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவில்லை? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வாட்ச் பில் எங்கே அண்ணாமலை?
அதேநேரத்தில் தன்னுடைய கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் பிலை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்போவதாக தெரிவித்த அண்ணாமலை, அதனையும் வெளியிடுவாரா? என்ற கேள்வியை திமுகவினர் சமூக ஊடகங்களில் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். ஊழல் குறித்து பேசும் அண்ணாமலை தன்னுடைய வாட்ச் பில்லை இதுவரை வெளியிடாமல் இருப்பது ஏன்? என்றும், இந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதற்காகவே நேரடி பத்திரிக்கையாளர் சந்திப்பை அவர் ஏற்பாடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ