சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாதகாப்பட்டி பகுதியில் நேற்றிரவு (ஏப். 12) நடைபெற்றது. மாநகர் மாவட்டத் தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவின் சட்டமன்றக்குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசினார்.
'பாஜகவின் சாதனைகள்'
அப்போது பேசிய அவர்,"கடந்த 9 ஆண்டுகளில் சாதாரண மக்கள் பயனடையக் கூடிய வகையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ளார். ஜல்ஜீவன் திட்டம் தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளுக்கு குடிநீரை கொண்டு வந்து சேர்த்துள்ளது.
50 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை ஜன்தன் யோஜனா திட்டத்தில் தொடங்கியதன் மூலம் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு சாதாரண மக்களால் சேமிக்க முடிந்தது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தை விட 5 மடங்கு அதிகமாக நான்கு வழிச்சாலைகள் பாஜகவின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த 9 ஆண்டுகளில் 2 லட்சம் கி.மீ., தூரத்திற்கு தரமான சாலைகள் அமைக்கப்பட்டதால் நாடு முழுவதும் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இதன்மூலம், சர்வதேச அளவில் சிறந்த பொருளாதார கட்டமைப்பில் 5ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
சௌராஷ்டிரா தமிழ் சங்கம்
காசி தமிழ் சங்கமம் 25 ஆயிரம் தமிழர்களை மனம் குளிர வைத்த பிரதமர் மோடி, செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்துவார். இன்றைய சூழ்நிலையில் சமூக நீதிப் பேசும் திராவிட கட்சிகளுக்கு இடையே பாஜகதான் உண்மையான சமூக நீதியை கடைப்பிடித்து வருகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளை தேடிச் சென்று தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர்ந்த பதவி கொடுத்து அழகு பார்த்து வருகிறோம்.
எடுத்துக்காட்டாக தற்போதைய குடியரசு தலைவர் முர்மு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாஜக இணையமைச்சர் முருகன் உள்ளிட்டவர்களை கூறலாம். மத்திய அமைச்சரவையில் 25 சதவீதத்தினர் பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள் அமைச்சராக உள்ளனர். எனவே உண்மையான சமூக நீதியை பின்பற்றுவது பாஜக தான்" என்றார்.
ஆ. ராஜா மீது தாக்கு
பொதுக்கூட்டத்தில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கே.பி.ராமலிங்கம், பேசுகையில்,"தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ராஜா ஒரு ஈனப் பிறவி. ராஜா என்னுடைய கால் தூசுக்கு கூட தகுதி இல்லாதவர்கள். அவர் செல்வாக்கு மிகுந்த தலைவர்களை இழிவாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் நினைத்தால் அரை மணி நேரத்தில் ஆட்சியை கலைத்து விட முடியும்" என்றார். ராஜாவுக்கு நாவடக்கம் தேவை என பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
தமிழ் புத்தாண்டு விழாவில் பிரதமர்
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நயினார் நாகேந்திரன்,"பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் தமிழையும், தமிழர்களையும் பெருமைப்படுத்தி வருகிறார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் ஏற்பாட்டின் பேரில் டெல்லியில் வியாழக்கிழமை (ஏப். 13) நடைபெறும், தமிழ் புத்தாண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
இதன்மூலம், டெல்லி தமிழர்களை மட்டுமன்றி உலகத் தமிழர்களையும் பிரதமர் மோடி பெருமைப்படுத்தியுள்ளார். புகழ் வெளிச்சம்படாத முடி திருத்துபவர் தொடங்கி கரகாட்டக் கலைஞர், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரையும் பிரதமர் மோடி அடையாளம் காட்டியுள்ளார்" என்றார்.
மேலும் படிக்க | இபிஎஸ் வைத்த குற்றச்சாட்டு... உடனே முதல்வர் ஆக்சன் - சபாநாயகர் சொன்னாது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ