10 மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை நடவடிக்கை
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை அதிகாலை சிறைப்பிடித்துள்ளது.
சென்னை: கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை அதிகாலை சிறைப்பிடித்துள்ளது.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருநாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் 51 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படை மீண்டும் தாக்கு தலையும் சிறைபிடிப்பையும் தொடங்கியுள்ளது.
ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் நேற்று வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நடுக் கடலில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர்.
அவர்கள் தமிழக மீனவர்களின் படகுகளுக்குள் புகுந்து திடீரென தாக்கத் தொடங்கினர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட முயன்றனர்.
இதே போல் புதுக்கோட்டையை சேர்ந்த 6 மீனவர்கள், ஒரு படகுடன் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்கள் காரை நகர் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ராமேசுவரம் மீனவர்கள் தலைமன்னார் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சிறைபிடிப்புக்கு முன்பு கச்சத்தீவு அருகேயும் மீனவர்கள் மீது முதலில் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளது. ரோந்து கப்பலை பிரவீன் என்பவரது விசைப்படகில் மோத விட்டு அவர்கள் தாக்கியதில் விசைப்படகின் பலகை உடைந்துள்ளது.
மீட்ட கடற்படையினர் பட கோடு 7 பேரையும் சிறை பிடித்து சென்றுள்ளனர்.
ஒரே நாளில் 2 முறை மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ராமேசுவரம் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மீனவ சங்கத் தலைவர் கூறுகையில் 2-ம் தேதி நடந்த பேச்சு வார்த்தையின் போது, தமிழக மீனவர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படமாட்டாது என இலங்கை அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது கொலை வெறி தாக்குதல் நடந்துள்ளது. இனியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து மீனவர்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றனர்.