ADMK-ல் யார் வேண்டுமானாலும் இணையலாம் TTV, சசிகலா தவிர: ஜெயக்குமார்
அதிமுக-வில் யார்வேண்டுமானாலும் இணையலாம். ஆனால், தினகரன் மற்றும் சசிகலாவை தவிர்த்துவிட்டு என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்!
அதிமுக-வில் யார்வேண்டுமானாலும் இணையலாம். ஆனால், தினகரன் மற்றும் சசிகலாவை தவிர்த்துவிட்டு என அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்!
மூதறிஞர் ராஜாஜியின் 140-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றம் அருகில் உள்ள சிலைக்கு மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின், ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர்களும், ஜெயவர்தன், எஸ். ஆர். விஜயகுமார் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு கர்நாடக அல்வா கொடுக்க பார்ப்பதாகவும், மேகதாது அணை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழக MP-கள் அழுத்தம் கொடுக்க முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் முடிவு எடுக்காத நிலையில் அவர் தமிழக மக்கள் உணர்வுகளை மதிக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்காததற்கு நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இந்த விவகாரத்திற்கு நீதிமன்ற அவமதிப்பு பொருந்தாது என்றும் கூறினார்.
அதிமுக என்ற இமயமலையுடன் அமமுகவில் உள்ள காளானை ஒரு போதும் ஒப்பிட முடியாது என்று அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மேலும் தினகரன், சசிகலா குடும்பத்தை தவிர யார் வேண்டுமானாலும் அமமுகவில் இருந்து அதிமுகவில் இணையலாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.