நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரிக்கை அப்போலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த, 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.


அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களுக்கும் விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.ஆனால், மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராக மாட்டார்கள் எனவும், உயர் நீதிமன்றத்தை நாட இருப்பதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.


இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் உண்மைத்தன்மை பற்றி விசாரணை நடத்த, ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி அப்பல்லோ நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.


ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்கவேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் தீர்வு காணும் வரை, மருத்துவ விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சசிகலாவும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.