அரக்கோணம் - வேளச்சேரி வழிசெலும் மகளிர் சிறப்பு மின்சார ரயில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் இருபாலர் பயணிக்கும் ரயிலாக மாற்றப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரக்கோணம் - சென்னை பாதையில் வாரம் 6 நாட்கள் இந்த சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. தற்போது அரக்கோணம் - சென்னை இடையே காலை 5.30 மணிக்கு மின்சார ரயில் ஏதும் இயக்கப்படவில்லை. இதனால் சென்னைக்கு செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவர் நைனா மாசிலாமணி, செயலர் ரகுநாதன் உள்ளிட்டோர் பலமுறை தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினர்.


இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புறநகர் ரயில்களுக்கான 2019-2020-ஆம் ஆண்டுக்கான புதிய அட்டவணையில் புதிய ரயில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் காலை 7.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் வளாகத்தை அடையும்.


அரக்கோணம் – வேளச்சேரி - அரக்கோணம் இடையே வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர 6 நாள்கள் இயக்கப்பட்டு வந்த மகளிர் சிறப்பு மின்சார ரயில், இருபாலர் பயணிக்கும் ரயிலாக மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அதேவேளையில் 9 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் முன்பகுதி 5 பெட்டிகள் மகளிருக்காகவும், பின்பகுதி 4 பெட்டிகள் இருபாலர் பயணிக்கும் பெட்டிகளாகவும் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த மாற்றங்கள் மற்றும் புதிய ரயில் இயக்கம் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.