நாளை சட்டசபை கூட்டம்: மெஜாரிட்டியை நிரூபிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
சட்டசபையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கொண்டு வரும் தீர்மானத்தின் மீது பகுதி வாரியாக ஓட்டெடுப்பு நடைபெறும்.
சென்னை: சட்டசபையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கொண்டு வரும் தீர்மானத்தின் மீது பகுதி வாரியாக ஓட்டெடுப்பு நடைபெறும்.
அதிமுக இரண்டாக உடைந்ததை தொடர்ந்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு அவருக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து 18-ம் தேதி அன்றே சட்டசபை கூட்டத்தைக் கூட்ட சபாநாயகர் ப. தனபால் உத்தரவிட்டிருப்பதாக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26(1)-ன் கீழ், சட்டசபையின் அடுத்த கூட்டத்தை பிப்ரவரி 18-ம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் சபாநாயகர் கூட்டி இருக்கிறார்.
அப்போது அமைச்சரவை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில், சட்டசபை கூடியதும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டுவருவார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனது அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார்.
அவரை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெவ்வேறு சட்டமன்ற கட்சி தலைவர்கள் உரையாற்றி தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள்.
இந்தத் தீர்மானத்தின்போது சபாநாயகர் நடுநிலை வகிக்கவேண்டும். தீர்மானத்துக்கு ஒரு ஓட்டு தேவைப்படும்போது மட்டுமே அவர் ஒரு சார்பாக ஓட்டளிக்க முடியும். அந்த வகையில் ஓட்டெடுப்பு நடக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதல் அமைச்சர் என்பதால், அவருக்கு முன்னாள் முதல் அமைச்சர் வரிசையில் இருக்கை ஒதுக்கப்படும். அவருக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் தனியாக வேறு இடம் ஒதுக்கப்படுமா என்பது ஆய்வில் உள்ளது.