மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் ஜெயலலிதா
முதல்- அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தமிழக வீரர் மற்றும் வீராங்கனை ஊக்கமளிக்கும் வகையில் உயரிய ஊக்கத் தொகை வழங்கி வாழ்த்தினார்.
அதைப்பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
துருக்கியில் டிராப்ஸான் நகரில் 2016 ஜுலை 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை உலக பள்ளிகளின் தடகள வாகையர் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் போது திடீரென ஏற்பட்ட ராணுவப் புரட்சியின் காரணமாக துருக்கியில் கடினமான சூழல் நிலவியது. அக்கடினமான சூழலிலும் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவ, மாணவியர் பதக்கங்கள் வென்றுள்ளனர்.
விளையாட்டுத் துறையில் இம்மாணவ மாணவியர் மேன்மேலும் பல சிகரங்களை எட்டுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலையினை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கி வாழ்த்தினார்.
சி.அஜீத் குமார்- 55 லட்சம் ரூபாய்
ஆர். நவீனன்- 25 லட்சம்
எல். சமயஸ்ரீ - 20 லட்சம்
எஸ்.பிரிய தர்ஷினி- 20 லட்சம்
மேலும், 2016 ஜுலை 21 முதல் 30-ம் தேதி வரை செர்பியா நாட்டின் நோவி சாட் நகரில் நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளர்களுக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் 4-வது முறையாக முதலிடம் பெற்ற திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த கே. ஜெனிதா ஆண்டோவுக்கு 25 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.