ஆடியோ சர்ச்சை: அமமுக-வில் இருந்து தங்க தமிழ்செல்வன் நீக்கப்படுகிறாரா?
அமமுக-வில் இருந்து தங்க தமிழ்செல்வன் நீக்கப்படுவது உறுதி என அமமுக செய்தித்தொடர்பாளர் அத்வீர ராமபாண்டியன் கூறியுள்ளார்.
சென்னை: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கும் அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அமமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு உள்ளது.
டிடிவி தினகரன் குறித்து தங்க தமிழ்செல்வன் கோபமாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் டிடிவி தினகரனின் உதவியாளரிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசுகிறார். அப்பொழுது அவர் கூறியது,
‘அண்ணன் எங்கே இருக்கிறார். இந்த மாதிரி பொட்டத்தனமான அரசியல் செய்வதை உங்கள் அண்ணனை நிப்பாட்டச் சொல்லுப்பா. நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் அழிந்து போய்விடுவீர்கள். நான் விஸ்வரூபம் எடுத்தால் நீ உள்பட அழிந்து போய் விடுவீர்கள். நான் நல்லவன். நேற்று தேனி மாவட்டத்தில் கூட்டம் போட்டீங்க. நாளைக்கு நான் மதுரையில் கூட்டம் போடுகிறேன். போடவா? நீ பாரு. என்ன நடக்கிறது என்று நீ பாரு. இந்த பேடித்தனமான அரசியல பண்ண வேணாம்னு உங்க அண்ணன்ட சொல்லிடு. இந்த மாதிரி அரசியல் செய்தால் தோற்று தான் போவிங்க. என்றைக்கும் ஜெயிக்க மாட்டிங்க’ என தங்க தமிழ்ச்செல்வன் தனது கோபத்தை கொட்டித்தீர்த்துள்ளார்.
இந்நிலையில், ஆடியோ விவகாரம் குறித்து அமமுக செய்தித்தொடர்பாளர் அத்வீர ராமபாண்டியன் கூறியது, தங்க தமிழ்செல்வன் மற்ற கட்சிகளில் சேர உள்ளதால், கட்சிக்கு எதிராக பேசி வருகிறார். அவரை கட்சியில் இருந்து நீக்குவது உறுதி. எஸ்.பி வேலுமணி மூலமாக அதிகவில் இணைய தங்க தமிழ்செல்வன் முயற்சி செய்து வருகிறார். அதேபோல செந்தில் பாலாஜி மூலமாக திமுகவில் இணைவதற்கும் தங்க தமிழ்செல்வன் முயற்சி செய்து வருகிறார் எனவும் அத்வீர ராமபாண்டியன் குற்றச்சாட்டி உள்ளார்.