மே 23 முதல் மாநிலம் முழுவதும் ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்‌ஷாக்களை சில கட்டுப்பாடுகளுடன் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும், சென்னை நகர கார்ப்பரேஷன் காவல்துறை வரம்பு பகுதிகளில் உள்ள வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படாது, அதே சமயம் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள வாகனங்களும் இயங்காது என்று அரசு வெளியீடு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது., 


பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு, சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது, சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகிய வாகனங்கள் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில், 23.5.2020 அன்று முதல் (தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும்) இயக்க அனுமதிக்கப்படுகிறது. 


எனினும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை இயக்க அனுமதி இல்லை. அப்பகுதிகளில் வாழும் ஆட்டோ/ரிக்ஷா ஓட்டுநர்களுக்கும் இவ்வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை.


பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிட்டைசர்களை ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர்களும், பயணியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை தினமும் மூன்று முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவியும், வாகனத்தில் சுகாதாரத்தையும் பேண வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.