மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு தடை!!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகோவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு விமானத்தில் சென்னைக்கு திருப்பி அனுப்பப்படுகிறார் அவர். விடுதலைப்புலிகள் அமைப்புடன் வைகோ தொடர்பு கொண்டிருந்ததாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள், விமானநிலையத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைகோவை அமர வைத்துள்ளனர்.
அமர வைத்த இடத்தை விட்டு எழுந்திருக்க கூடாது என்று வைகோவிற்கு மலேசிய அதிகாரிகள் கட்டுப்பாடுகள் வேறு விதித்துள்ளனர். தாம் இந்திய குடிமகன் என வைகோ கூறியதை மலேசிய அதிகாரிகள் ஏற்கவில்லை. பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் யங் வைகோவை அனுமதிக்க கூறி எடுத்த முற்சிகளும் அதிகாரிகளிடம் பலிக்கவில்லை.
இலங்கையில் வைகோ மீது வழக்குகள் இருப்பதாக மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே மலேசியாவிற்குள் அவரை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர். பினாங்கு மாநில துணைமுதல்வர் ராமசாமி மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவே வைகோ அந்நாட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மலேசியாவிலிருந்து இன்று இரவு அவர் மீண்டும் இந்தியாவிற்கு திருப்பியனுப்பப்படுகிறார். சென்னையில் உள்ள மலேசிய தூதரகம் அவருக்கு விசா வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.