சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூரு கோர்ட்டில் சரணடைய உத்தரவு
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு ரூ10 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம். சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு சிறை தண்டனையையும், அபராதத்தையும் விதித்தது. பின்னர் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தது.
இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பெங்களூரு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டது. மேலும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் 6 நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த 3 மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முன்னால் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரை இந்த வழக்கில் இருந்து நீக்கி விட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் மீது இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.