குற்றால மழையே எனக்கு குளிக்க தடையா!
தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருகிறது. இதனால் காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது;- ஒரு குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகி குமரிக்கடல் முதல் லட்சத்தீவு வரை பரவி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும். குறிப்பாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என கூறினார்.
வட கிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. அதனால் குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகமாகக் கொட்டுகிறது. ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் நேற்று இரவு முதல் தண்ணீர் அதிகரிக்கத் தொடங்கியது. மெயின் அருவில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியதால் பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகிய அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களை அருவிக்கு அருகில் செல்லவும் அவர்கள் அனுமதிக்கவில்லை. தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.