சுமையற்ற, சுகமான கல்வி முறை தான் மகிழ்ச்சியான பள்ளிகளுக்கு அடிப்படை என பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து பா.ம.க. நிறுவனர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.,


மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) ஆளுகைக்குள் இயங்கும் அனைத்து பள்ளிகளின் வளாகங்களும் கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக மாற்றப்பட வேண்டும் என்று சிபிஎஸ்சி அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நோக்கம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது என்றாலும் கூட, கல்வி முறையை சுமையற்றதாக மாற்றாமல் இத்தகைய அலங்கார அணுகுமுறைகள் பயனளிக்காது.


பள்ளி நிர்வாகங்களுக்கு இது தொடர்பாக சி.பி.எஸ்.இ செயலாளர் அனுராக் திரிபாதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும்   தங்களின் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்; மாணவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது; பள்ளிகளில் செல்பேசிகளை பயன்படுத்தக்கூடாது; அனைவரும் மூச்சுப்பயிற்சிகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பள்ளிக்குழந்தைகள் அனுபவிக்கும் அச்சம், மனவேதனை, எதிர்கொள்ளும் அவமானம், அவமரியாதை ஆகிய அனைத்துக்கும் பள்ளி வளாகங்களில் பல திசைகளில் இருந்தும் அவர்கள் மீது  ஏவப்படும் கோபம் தான் காரணம் எனும் நிலையில், பள்ளி வளாகங்களை கோபமற்ற, மகிழ்ச்சியான பகுதிகளாக மாற்ற வேண்டும் என்ற சி.பி.எஸ்.இ&யின் முடிவு பாராட்டப்பட வேண்டியதாகும்.


பள்ளி வளாகங்கள் கோபமற்ற, மகிழ்ச்சியான பகுதிகளாக திகழ வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடும் ஆகும். பொதுவாழ்வுக்கு வந்த பின்னர் கடந்த 40 ஆண்டுகளாக  இதைத் தான் நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், பள்ளி வளாகங்களில் கோபம் ஏற்படுவதற்காக காரணிகளை அகற்றுவது தான் இதற்கு சிறந்த தீர்வாக இருக்குமே தவிர, கோபத்தை கட்டுப்படுத்துவது முழுமையாக பயனளிக்காது. அது ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கும் செயலாகவே அமையும்.


 சுகமான, சுமையற்ற, தரமான, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை. பள்ளி வளாகங்களை கோபமற்றவையாகவும், மகிழ்ச்சி நிறைந்தவையாகவும் மாற்றுவதற்கு இது தான் சிறந்த வழியாகும். ஆனால், இன்றையக் கல்வி அப்படியா இருக்கிறது? என்று அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


குழந்தைகளை முன்-மழலையர் பள்ளிகளில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குவதற்காக முதல் நாள் இரவு முதல் பெற்றோர்கள் வரிசையில் நிற்கத் தொடங்குவதில் இருந்து தான் கல்விச் சீரழிவு தொடங்குகிறது. மழலையர் வகுப்புகளிலும், தொடக்கக்கல்வியிலும் மாணவர்களுக்கு பல்வேறு சிறப்புப் பயிற்சிகள், 12&ஆம் வகுப்புக்கு பிறகு எழுதவிருக்கும் நீட், ஐ.ஐ.டி கூட்டு நுழைவுத் தேர்வு,  பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் ஆகியவற்றுக்காக ஆறாம் வகுப்பிலிருந்தே கூடுதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள், மாணவர்களின் எடையை விட அதிக எடை கொண்ட புத்தகங்கள் என மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய ஆயிரம்  விஷயங்களை வைத்துக் கொண்டு பள்ளி வளாகங்களை கோபமற்ற, மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக மாற்ற வேண்டும் என்றால் அது ஏட்டில் மட்டுமே சாத்தியமாகும்; நடைமுறையில் சாத்தியம் ஆகாது.


தாய்மொழியில் கல்வி வழங்குவதை தவிர்த்து விட்டு, ஆங்கில வழியில் கல்வி வழங்குவதை விட  மோசமான தண்டனையை மாணவர்களுக்கு வழங்க முடியாது. அனிச்சையாக வரும் வார்த்தைகளையும், சிந்தனைகளையும் அடக்கிக் கொண்டு, தங்களுக்கு சம்பந்தமே இல்லாத இன்னொரு மொழியில் பேச வேண்டும்; சிந்திக்க வேண்டும் என்பது எவ்வளவு கொடுமையானது? சென்னை போன்ற நகரங்களில்  குழந்தைகள் அதிகாலையில் உறக்கம் கூட கலையாமல் எழுந்து, நீராடி, போக்குவரத்து நெரிசலில் பல கிலோமீட்டர் தூரம் பயணித்து பள்ளிகளுக்கு செல்வது என்பதே பெரும் மனித உரிமை மீறலாகும்.


அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தான் அறிவாளிகள் என்ற தவறான சிந்தனை அனைவரின் மூளையிலும், மனதிலும் விதைக்கப்பட்டுள்ளது. அதனால் மதிப்பெண்களை நோக்கி ஓடும் நிலைக்கு மாணவர்களும், விரட்டும் நிலைக்கு ஆசிரியர்களும், அதை ஊக்குவிக்கும் நிலைக்கு பெற்றோரும்  தள்ளப்பட்டுள்ளனர். எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால் மாணவர்களுக்கு விரக்தியும், ஆசிரியர்களுக்கு கோபமும், பெற்றோருக்கு மன உளைச்சலும் ஏற்படுவது இயற்கையாகி விட்டது. இந்த சூழலில் கோபப்பட வேண்டாம் என்று கூறுவதே ஆசிரியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடும்.


பள்ளிகள் கோபமற்ற, மகிழ்ச்சியாக பகுதிகளாக மாற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்கான தீர்வு கல்வி முறையை மாற்றியமைப்பதில் தான் இருக்கிறதே தவிர,  வெறுமனே சுற்றறிக்கை அனுப்புவதில் இல்லை. உலகில் தரமான, சிறப்பான கல்வி பின்லாந்தில் தான்  வழங்கப்படுகிறது. அந்நாட்டில் உள்ள பள்ளி வளாகங்கள் தான் கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த  பகுதிகளாக திகழ்கின்றன. இதற்குக் காரணம் அங்கு மழலையர் கல்வி இல்லை, ஆங்கில வழிக் கல்வி இல்லை, அதிக மதிப்பெண் எடுக்க வேண்டிய கட்டாயமோ, தரவரிசையோ இல்லை, வீட்டுப் பாடம் இல்லை, நுழைவுத்தேர்வுகள் இல்லை என்பது தான். இவ்வளவுக்குப் பிறகும் அங்கு படிப்பவர்கள் புத்திசாலிகளாகவும், சிந்திக்கும் திறன் கொண்டவர்களாகவும் உள்ளனர். ஆனால், இவ்வளவு இருந்தும்  இந்தியக் கல்வி முறையில் பயில்பவர்கள் ஏட்டு சுரைக்காய்களாக மட்டும் தான் விளங்குகின்றனர்.


சுருக்கமாக கூற வேண்டுமானால், மலர்களாக கையாளப்பட வேண்டிய மாணவர்களை, மனிதர்களாகக் கூட கையாளாமல், மதிப்பெண் எந்திரங்களாக கையாளுவது தான் அனைத்துக்கும் காரணம் ஆகும். இந்த நிலையை மாற்ற வேண்டும்; அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்; கல்வியை சுகமானதாகவும், சுமையற்றதாகவும் மாற்ற வேண்டும். அதன்மூலமாகத் தான் பள்ளிகளை  கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த பகுதிகளாக மாற்ற முடியும் என்பதை அரசுகள் உணர வேண்டும் குறிப்பிட்டுள்ளார்.
  


மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.