கொட்டும் மழையிலும் போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம்!!
சென்னை பல்லவன் இல்லம் முன்பு கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதிய உயர்வு கோரி போக்குவரத்துத் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் சென்னை பல்லவன் இல்லம் முன் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், இந்தப் போராட்டம் 6வது நாளாக இன்றும் தொடர்கிறது.
ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றுள்ளனர். கொட்டும் மழையிலும் பெண்கள், குழந்தைகளுடன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல் ஆகியவற்றையும் நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்றும் காலை முதல் குறைந்தளவிலான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் 70 சதவீதம் பேருந்துகள் கோவையில் 60 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இன்று காலை நிலவரப்படி கன்னியாகுமரில் 865 பேருந்துகளில் 269 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவள்ளூர்-80%, கன்னியாகுமரியில் 60%, புதுக்கோட்டை - 55% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்பினால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், ஆனால் இனி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை இல்லை என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் இன்று அனைத்து கோட்ட அலுவலகங்கள் முன்பும் குடும்பத்தினருடன் போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மசூதி தெருவில் உள்ள சிஐடியு சங்கத்தில் அறிவித்தன. அதன்படி பல்லவன் இல்லத்தில் தங்கள் குடும்பத்தினருடன் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.