பொதுமக்கள் வதந்தியை நம்பி அதிக விலைக்கு உப்பு மூட்டைகளை வாங்கி வைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட இந்தியாவில் உப்பு தட்டுப்பாடு என்ற தகவல் 2 நாட்களுக்கு முன்பு பரவியது. இதனால் ஒரே நேரத்தில் கடைகளில் மக்கள் கூட்டம் கூடியது.


இந்த நிலையில் தமிழகத்திலும் உப்பு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் நேற்று காலை முதலே பரவியதால் கடைகளில் உப்பு வாங்க பொது மக்கள் திரண்டனர். பொதுமக்கள் உப்பு வாங்க கூட்டமாக வருவதால், உடனே வியாபாரிகள் உப்பு விலையை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்தனர். 


குறிப்பாக சேலம் செவ்வாய்ப்பேட்டை கடை வீதியில் உள்ள உப்பு மண்டிகளில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். உப்பு மூட்டைகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். கிலோ 25  எடைகொண்ட பொடி உப்பு மூட்டை வழக்கமாக ரூ 200 வரை விற்கப்படும். நேற்று இந்த விலை திடீரென உயர்ந்து 300 வரை விற்கப்பட்டது. 160  ரூபாய்க்கு விற்கப்படும் கல் உப்பு நேற்று 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


இதைபோல தமிழகத்தில் பல இடங்களில் விலையை பொருட்படுத்தாத பொதுமக்கள் மூட்டை, மூட்டையாக உப்புகளை வாங்கி சென்றனர். இதைபோல பொதுமக்கள் மளிகை கடைகளுக்கு  சென்று உப்பு பாக்கெட்டுகளை இரண்டு மற்றும் மூன்று மடங்கு விலை அதிகம் கொடுத்து வாங்கி சென்றனர். சாதாரண நாட்களில் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட உப்பை ரூ.30 முதல் ரூ.50 வரை கடைக்காரர்கள் விற்பனை செய்தனர். 


இது குறித்து அதிகாரி ஒருவரிடம் கூறுகையில்:- பொதுமக்கள் புரளியை நம்பி அதிக விலைக்கு உப்பு மூட்டைகளை வாங்கி வைக்க வேண்டாம். இதுபோன்ற புரளியை கிளப்பி விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.