அடுத்த ஒரு வருஷத்திற்கு இந்த முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - அதுவும் தி.நகரில்...
Chennai T Nagar Traffic Diversions: சென்னை தியாகராய நகரில் நாளை முதல் அடுத்த ஓராண்டுக்கு முக்கிய சாலைகளில் ஏற்பட இருக்கும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
Chennai T Nagar Traffic Diversions: சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல பெருநகரங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது அதிகமாகும் மக்கள்தொகையும், சிறு நகரங்களில் இருந்து பெருநகரங்களை நோக்கிய இடப்பெயர்ச்சி ஆகியவற்றை கூறலாம். இதனால், குடிநீர் தட்டுப்பாடு, கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல பிரச்னைகளை பெருநகரங்கள் எதிர்கொள்கின்றன. அதிலும் முக்கிய பிரச்னையாக இருப்பது போக்குவரத்து நெரிசல் எனலாம்.
இந்த போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என பலரும் கூறுவது வாகனங்களின் பெருக்கம் என்பதாகவே இருக்கும். பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தினால் இந்த பிரச்னை வராது என்பதுதான் பலரின் கருத்தாகவே இருக்கும், இது சரியானதும் கூட. ஆனால், பொது போக்குவரத்தை பெருவாரியான மக்கள் தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் பணிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்ல அது ஏதுவாக இருப்பதில்லை என்பதால்தான்.
மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி...
சென்னையை உதராணமாக எடுத்துக்கொண்டால் மின்சார ரயில், அரசின் பேருந்து சேவை ஆகியவை பெரிய பொது போக்குவரத்து சேவையாக இருக்கின்றன. மின்சார ரயில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேருந்தை மக்கள் தயங்காமல் பயன்படுத்தினாலும் அதில் நேரம் அதிகம் எடுக்கிறது. இவைக்கு மாற்றக்காக கொண்டு வரப்பட்டதுதான் மெட்ரோ ரயில் சேவை. சென்னையில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பொது போக்குவரத்தை ஊக்கப்படுத்துவதில் மெட்ரோ ரயில்தான் முதன்மையாக இருக்கிறது.
மேலும் படிக்க | அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
அந்த வகையில், சென்னையில் தற்போது முதல் கட்டமாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ இயங்குகிறது. விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையில் நீல நிற வழித்தடமும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை பச்சை நிற வழித்தடமும் உள்ளது.
ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்
இதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் பர்பிள் நிற வழித்தடமாக மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் 2 வரையும், ஆரஞ்சு நிற வழித்தடமாக பூந்தமல்லி பைபாஸ் முதல் கலங்கரை விளக்கம் வரையிலும், சிவப்பு நிற வழித்தடமாக மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரையும் மெட்ரோ கொண்டுவரப்பட உள்ளது.
குறிப்பாக, இந்த இரண்டாம் கட்ட மெட்ரோவின் கட்டுமான பணிகள் தற்போது சென்னை முழுவதும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனால், முக்கிய சாலைகளில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் பணிகள் ஒருபுறம் இருக்க பல இடங்களில் மேம்பால பணிகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தியாகராய நகரில் மேம்பால பணி நடைபெற்று வரும் நிலையில், நாளை முதல் அடுத்த ஓராண்டுக்கு முக்கிய சாலைகள் முடக்கப்பட இருக்கிறது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு விடுத்து மாற்று பாதைகள் குறித்தும் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளது.
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...
பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், "மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் ஏப். 27ஆம் தேதி (நாளை) முதல் அடுத்த 2025ஆம் ஆண்டு ஏப்.26ஆம் தேதி வரை அதாவது ஒரு வருடத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும்.
- வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராய சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.
- பர்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.
- தி. நகர் பேருந்து நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம்.
- சிஐடி நகர் 1வது பிரதான சாலையில் இருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்.
- தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டனாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க | நாய்க்கு புலி வேடமிட்டு மக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்! போலீஸார் தீவிர விசாரணை...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ