Marina Air Show: 2 மணிநேரம் ஆம்புலன்ஸ் லேட்?! கதறி அழுத பெண்... இதுவரை 5 பேர் பலி
Marina Air Show: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்வழி சாகச நிகழ்வை காண வந்து, உடல்நலக்குறைவு ஏற்பட்டு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
Chennai Marina Air Show, Death Count: இந்திய விமானப்படையின் 92ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுமார் 15 லட்சம் பேர் நேரில் நிகழ்ச்சியை பார்வையிட்டதாக கூறப்படுகிறது. ஒரு விமான சாகச நிகழ்ச்சியை அதிகமானோர் நேரில் கண்டது இதுதான் என்றும் இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. நேற்று நண்பகல் 11 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், மதியம் 1 மணிக்கு நிறைவுபெற்றது.
கடும் வெயில் ஒருபக்கம், அதிக மக்கள் கூட்டம் ஒருபக்கம் என நேற்று சென்னை ஒரு வழியாகிவிட்டது எனலாம். காலை 9 மணிக்கு தொடங்கிய கூட்ட நெரிசலும், போக்குவரத்து நெரிசலும் மாலை வரை நீடித்தது. பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள் என அனைத்து பொது போக்குவரத்திலும் மக்கள் நிரம்பி இருந்தனர். தனிப்பட்ட வாகனங்களும் அதிகமாக இருந்ததால் சென்னையின் முக்கிய சாலைகள் நேற்று ஸ்தம்பித்தன. புறநகர் ரயில்களில் ஒருநாளைக்கு சராசரியாக 55 ஆயிரம் பயணிகள் பயணிக்கும் இடத்தில், நேற்று மாலை 4.30 மணி நிலவரப்படி மட்டும் சுமார் 3 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு 5 ஆக உயர்வு
இத்தனை லட்சம் மக்கள் கூடும் இடத்தில் போதுமான குடிநீர் வசதியோ, நகரும் கழிவறை வசதியோ ஏதும் ஏற்படுத்தித்தரவில்ல என குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் காணப்பட்டன. அதேநேரத்தில், போதுமான அளவுக்கு கூடுதல் ரயில்களோ, பேருந்துகளோ இயக்கப்படவில்லை எனவும் மக்கள் கருத்து தெரிவித்தினர். நிகழ்வின் போதே 20க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த நிலையில், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.
விமான சாகச நிகழ்ச்சியை பார்வையிட வந்தவர்களில் கூட்ட நெரிசல் காரணமாகவும், கடுமையான வெயிலின் தாக்கத்தாலும் ஓமந்துரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் சுமார் 93 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், பலரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிகழ்வை காண வந்து உடல்நலக்குறைவால் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெருங்களத்தூரை சேர்ந்த சீனிவாசன் (48), திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன் (34), கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜான் பாபு (56), மரக்காணத்தை சேர்ந்த மணி (55) மற்றும் தினேஷ் குமார் (37) உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
'2 மணிநேரம் ஆம்புலன்ஸ் லேட்'
மெரினா வான்வழி சாகச நிகழ்வை பார்த்து திரும்பிக்கொண்டிருந்தபோது, கொருக்குப்பேட்டை அனந்த நாயகி நகர் பகுதியை சேர்ந்த ஜான் என்பவர் வெயிலின் தாக்கம் காரணமாக மயங்கி விழுந்துள்ளார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றபோது மருத்துவர்கள் ஜான் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவரது மனைவி கூறும்போது, தானும் தனது கணவர் மற்றும் தம் உறவினர் என மொத்தம் ஐந்து பேர் வான் சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரைக்குச் சென்றதாகவும், தம் கணவர் மயங்கி விழுந்தவுடன் தங்கள் கையில் இருந்த தண்ணீரை கொடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்தும் சுமார் 2 மணி நேரம் கழித்துதான் ஆம்புலன்ஸ் வந்ததாக கண்ணீருடன் குற்றஞ்சாட்டினார்.
மேலும் படிக்க | கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் ஆட்சி அமைக்கவில்லை - சி. விஜயபாஸ்கர்!
தனது கணவரை ஆம்புலன்ஸ் மூலமாக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் பிரிந்துவிட்டது என்று கூறியதாகவும், ஆம்புலன்ஸ் முன்னரே வந்திருந்தால் தனது கணவரை நிச்சயம் காப்பாற்றி இருக்க முடியும் என்றும் அவர் கதறி அழுது காண்போரின் கண்களை கலங்கடித்தார்.
அரசு மீது கடும் விமர்சனங்கள்
இதுவரை மொத்தமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையில், அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இத்தனை லட்சம் பேர் கூடும் இடத்தில் முன்னரே மருத்துவ முகாம்கள், மருத்துவர்கள் மற்றும் அதிக அளவில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு சரியான தகுந்த முன்னேற்பாடுகளை செய்யாத காரணத்தினாலேயே இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது X சமூக வலைதளப்பக்கத்தில் அரசு தரப்பில் செய்யப்பட்ட முன்னேற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். அவர் தனது பதிவில்,"சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாகரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காகத் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒருமுறையும் பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப் படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. இது மட்டுமின்றி இந்திய ராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும், 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | மக்கள் வெள்ளத்தில் வேளச்சேரி ரயில் நிலையம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ