Tamil Book Review: நடிப்பாற்றலின் உச்சம் சங்கரதாஸ் சுவாமிகள் : நாடகவியலாளர் கி.பார்த்திபராஜா
Tamil Book Review: கி.பார்த்திபராஜா எழுதிய சாமீ... `நாடகத் தந்தை` தூ.தா.தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாற்றுப் பிரதியை 368 பக்கங்களில் 70 அத்தியாயங்களோடு பரிதி பதிப்பகம் 2021இல் வெளியிட்டுள்ளது.
Tamil Book Review: நாடகவியலாளர், தமிழ்ப் பேராசிரியர் முனைவர் கி.பார்த்திபராஜா சென்னைப் பல்கலைக்கழக மாணவராகப் பயின்றபோது நாடக இயக்கங்களோடு இயங்கத் தொடங்கியுள்ளார். தற்போது 'மாற்று நாடக இயக்கம்' என்னும் அமைப்பைத் தோற்றுவித்து, மாணவர்களுக்கு நாடகப் பயிற்சியளித்து வருகிறார். தெருக்கூத்து, இசை நாடகம், நவீன நாடகங்களைக் குறித்து ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். 'நெடும்பயணம்', 'புதிய ஒளி’ ஆகிய இரண்டும் இவரது நாடகத் தொகுப்புகள் ஆகும். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தமிழ் நாடக வரலாற்றின் மிக முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர் தூ.தா.தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். நாடக நடிகர், பாவலர், இசையறிஞர், நாடக ஆசிரியர், நடிப்புப் பயிற்றுநர், நாடகக் குழு நிறுவனர் என நாடகத்துறையின் பன்முக ஆற்றல் கொண்டவராகத் திகழ்ந்துள்ளார். இவர் 1867 முதல் 1922 வரை வாழ்ந்துள்ளார்.
நாடக சபைகள்
நாடக நடிகனாக இருந்த சுவாமிகள் நாடகத்தை இயக்கும் ஆசிரியராகப் பரிணமித்ததின் பின்னணி, சுவாமிகளின் துறவு வாழ்க்கை, சங்கரதாஸ் சுவாமிகள் நடத்திய 'நாடக சபைகள்', நாடகப் பயிற்சிப் பள்ளிகளின் முன்னோடியாக விளங்கிய சுவாமிகளின் 'பாலர் சபா'-வின் பயிற்சி முறைகள், நாடகத் துறையில் ஏற்படுத்திய மாற்றங்கள், தாக்கங்கள், முத்துச்சாமி கவிராயருடன் நட்பு, குறைந்த மணி நேரத்தில் நாடகங்களை எழுதும் ஆற்றல், புராணம், இதிகாசம், காவியம், காப்பியம், வரலாறு, நாட்டார் வழக்காறு, இலக்கியம், உண்மை நிகழ்வு, சமகால அவலம் போன்றவற்றை நாடகப் பிரதியாக்குதல், கதை மையம், பாடல், வசனம், உடல்மொழி, வெளிப்பாடு, கலைஞர்கள் தெரிவு, இசை நாடகப் புலமை, மரபுக் கவிதையில் புலமை, மேற்கத்திய இசையின் தாக்கம் போன்றவற்றை உள்ளடக்கிய கலவையாக எழுதியுள்ளார் கி.பார்த்திப ராஜா.
ஆளுமை மிக்கவர்
சங்கரதாஸ் சுவாமி தன்னுடைய நாடகங்களில் நடிக்கும் கலைஞர்களுக்கு மொழிப் பற்றுடன் தமிழ்மொழியைக் கற்றுக்கொடுத்துள்ளார். அதேசமயத்தில் அவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதான பாடத்தையும் கற்பித்துள்ளார். இலக்கணப் புலமையோடு கவி பாடுவதில் வல்லவராகவும் இரண்ய கசிபு, இராவணன், எமதர்மன், சனீஸ்வரன் போன்ற அசுர வேடங்களில் நடித்து நடிப்பாற்றலில் ஆளுமை மிக்கவராகவும் திகழ்ந்துள்ளார். சங்கரதாஸ் சுவாமிகள் தனது முப்பது ஆண்டுகளுக்கு மேலான நாடக வாழ்க்கையில் ஏராளமான நாடகக் கலைஞர்களை உருவாக்கியுள்ளார். அதில் பி.யு. சின்னப்பா, சி.கன்னையா, டி.எஸ். துரைராஜ், தி.ச.கண்ணுச்சாமி பிள்ளை, டி.கே.சங்கரன், டி.கே.முத்துசாமி, டி.கே.சண்முகம், டி.கே.பகவதி, பாலாம்மாள், பாலாமணி போன்றோர் குறிப்பிடத்தக்கவராவர்.
தனது 24 வயதில் நாடக உலகில் அடியெடுத்து வைத்த சங்கரதாஸ் சுவாமிகள் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். அவற்றைப் பட்டியலிட்டு உள்ளது இப்பிரதி. மேலும் அவர் எழுதிய கவிதைகளைப் பதிவு செய்து உரையாடியும் இருக்கிறது. சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய நாடகங்களில் குறிப்பிட்ட சில நாடகங்களை அதன் உரையாடலின் வடிவிலேயே அளித்திருக்கிறது. இப்பதிவானது வாசகர்களுக்கு நாடகம் குறித்த வடிவத்தை, வாசிப்பு அனுபவத்தில் அளித்துச் செல்லும். சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றைச் சிறுசிறு அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. அதில் கூறப்படும் செய்திகள் குறுகுறு பத்திகளாக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாயங்களுக்கு இடையிடையே கறுப்பு வெள்ளை நிறத்தில் படங்களைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பிரதியின் பக்க வடிவமைப்பும், முன் அட்டைப் படமும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சாமீ பிரதி இப்படிப் பல்வேறு அம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
புதுமையும் தனித்துவமும்
சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றில் பிறப்பு முதல் இறப்பு வரையில் மட்டும் பதிவு செய்யவில்லை. மாறாக அவரைப் பற்றித் தொடர்ந்து பேசிய ஆளுமைகளின் நூற்குறிப்புகளை முன்வைத்தும் அவருடைய வரலாற்று நூலைக் கட்டமைத்திருப்பது என்பது மாற்று அணுகுமுறையே. மேலும், இந்தப் பிரதியானது 350 பக்கங்களுக்கு மேல் எழுதப் பெற்றிருந்தாலும் 122 ஆவது பக்கத்திலேயே சுவாமியின் மரணம் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கு மேற்பட்ட சுமார் 220 பக்கங்கள் வரையில் சுவாமிகளின் நாடகச் செயல்பாட்டை உரையாடிச் செல்கிறது. மேலும், சுவாமிகளின் மாணவர்களையும், அவர்களது பார்வையில் சுவாமிகளின் படைப்பாற்றல் திறனையும் பயிற்சியையும் மதிப்பீட்டையும் உள்ளடக்கியுள்ளது. அந்த வகையில் சங்கரதாஸ் சுவாமிகளுடைய நாடகச் செயல்பாடுகளை வரலாற்று பிரதியாக வாசகருக்கு வழங்கக்கூடிய விதத்தில் இந்தப் பிரதி புதுமையும் தனித்துவமும் பெற்றுள்ளது எனலாம்.
மேலும், குறைந்த பக்க அளவு கொண்ட பிரதியாக எழுதப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் வாசகருக்கு ஏற்பட வாய்ப்புண்டு. இதனிடையே பிரதியில் தட்டச்சு பிழைகள் ஆங்காங்கே உள்ளதால் அவை தொடர் வாசிப்பிற்குத் தடையாக அமையக்கூடும். நாடகவியலாளர் பார்த்திபராஜா சுவாமியைத் தன் குருவாகப் பாவித்துப் பக்திமையுடன் அவரை வியந்து பார்க்கும் பார்வையுடன் அணுகியுள்ளதைப் பிரதி முழுக்க காணலாம். சுவாமிகளுடைய நாடகங்களால் ஈர்க்கப்பட்ட கி.பார்த்திபராஜா அவருடன் ஐக்கியமாகி நாடகவியலோடு பயணப்படுகிறார். அதனடிப்படையில் சாமீ ஒரு வரலாற்று நூலாக வாசிக்கும் பார்வையைக் கடந்த ஒரு மாற்று வாசிப்பைக் கோரி நிற்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ