நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணனின் 'ஜீன் மெஷின் : ரோபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’: நூல் மதிப்பீடு

நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய ‘ஜீன் மெஷின் : ரோபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’ என்னும் நூலை தமிழில் சற்குணம் ஸ்டீவன் மொழியாக்கம் செய்துள்ளார். 

Written by - முனைவர் பலராமன் சுப்புராஜ் | Last Updated : Feb 4, 2023, 03:31 PM IST
  • நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய ‘ஜீன் மெஷின் : ரோபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’ என்னும் நூலை தமிழில் சற்குணம் ஸ்டீவன் மொழியாக்கம் செய்துள்ளார்.
  • காலச்சுவடு பதிப்பித்த இந்நூலானது நேற்று (03.02.2023) சென்னை தரமணி ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரி வளாகத்தில் வெளியிடப்பட்டது.
  • நிகழ்ச்சியில் ‘ஜீன் மெஷின்’ நூலை எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஜி.குப்புசாமி மதிப்பீடு செய்து பேசினார்.
நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணனின் 'ஜீன் மெஷின் : ரோபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’: நூல் மதிப்பீடு title=

நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணனின் ‘ஜீன் மெஷின் : ரோபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’ நூல் மதிப்பீடு - ஜி.குப்புசாமி (எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்) 

ஜி.குப்புசாமி தமிழ் இலக்கியச்சூழலில் அயல்மொழியில் இருந்து தமிழ்மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யும் பணிகளில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக இயங்குபவர். இவர் ஓரான் பாமுக் எழுதிய ‘என் பெயர் சிவப்பு’, ‘பனி’,இஸ்தான்புல் ஜான் பான்வில் எழுதிய ‘கடல்’, அருந்ததி ராய் எழுதிய ‘பெருமகிழ்வின் பேரவை’, ‘சின்ன விஷயங்களின் கடவுள்’, ‘ஆஸாதி’, அல்பெர்தோ கிரனாடோ எழுதிய ‘சே குவேரா என்ற புரட்சிக்காரன் உருவான கதை’, ரேமண்ட் கார்வர் ‘சிறுகதைகள்’, ஹாருகி முரகாமி எழுதிய ‘பூனைகள் நகரம்’ எனப் பல முக்கியமான எழுத்தாளர்களையும் நூல்களையும் ஆங்கிலித்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய ‘ஜீன் மெஷின் : ரோபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’ என்னும் நூலை தமிழில் சற்குணம் ஸ்டீவன் மொழியாக்கம் செய்துள்ளார். காலச்சுவடு பதிப்பித்த இந்நூலானது நேற்று (03.02.2023) சென்னை தரமணி ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரி வளாகத்தில் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் ‘ஜீன் மெஷின்’ நூலை எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஜி.குப்புசாமி மதிப்பீடு செய்து பேசினார். இந்நிகழ்ச்சியில் இந்நூல் குறித்து இவர் பதிவு செய்ததைக் காண்போம்.

Book Revies of Nobel Laureate Venky Ramakrishnan's 'The Gene Machine: Robosome Secrets and Contests in Discovery

பொது வாசகர்களுக்கான அறிவியல் நூல்கள் பலதரப்பட்டவை. எளிமையான நடையில் சுவாரஸ்யமாக அறிவியல் விஷயங்களை விவரிக்கும் நூல்கள் ஆங்கிலத்தில் ஏராளமாக வந்துகொண்டிருக்கின்றன. தமிழிலும் பொது வாசகர்களுக்கான அறிவியல் நூல்களுக்கென்று ஒரு மரபு இருக்கிறது. அறிவியல், சூழலியல், மருத்துவம் எனப் பல்வேறு அறிவுத்தளங்களில் தமிழில் நூல்கள் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே வந்துகொண்டிருக்கின்றன. அவற்றின் தரத்தைப் பொறுத்தவரை சீராக இருப்பதாகச் சொல்ல முடியாது. கடினமான விஷயங்களை சுவையாக விவரிக்கும் நூல்களும் உண்டு. மேம்போக்காகவும், நுட்பமான பொருட்களை எளிமைப்படுத்தியும் நீர்த்துப் போகவைக்கும் நூல்களும் உண்டு. துல்லியமாகவும் உயர்ந்த தரத்திலும் எழுதப்பட்ட நூல்கள் வாசகர்களின் வரவேற்பைப் பெறாமலும் போயிருக்கின்றன. அதே நேரத்தில் துறை சார்ந்த வல்லுநர்களால் எழுதப்படும் பெரும்பாலான நூல்கள் சாதாரண வாசகர்களால் உள்வாங்கிக்கொள்ள முடியாத வகையில் உயர்கல்வி பாடப்புத்தகங்களைப் போல அமைந்துவிடுவதும் நிகழ்கிறது. ஆனால் இதுவரை அறிவியலில் நோபல் பரிசு பெற்ற ஒருவர் எழுதிய நூல் எதுவும் தமிழில் வாசிக்கக் கிடைத்ததில்லை. இப்போது தமிழுக்கு அந்த நல்நூல் வாய்த்திருக்கிறது.

அதுவும் நோபல் பரிசு பெற்ற ஒரு தமிழர் எழுதிய அறிவியல் நூல், ஆரம்பக் கல்வியை மட்டுமே முடித்திருக்கும் ஒருவருக்கும் எளிதாகப் புரியும்படியும், சுவையாகவும் எழுதப்பட்டு, தமிழிலும் மிகச்சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது என்றால், ஜீன் மெஷினை மட்டுமே சொல்லமுடியும்.

மேலும் படிக்க | நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய தமிழாக்க நூல் வெளியீடு 

இந்த நூல் நம் எல்லோருக்கும் பெருமை சேர்த்துத் தந்திருக்கும் பேராசிரியர் வெங்கி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு உலகின் உச்ச விருதைப் பெற்றுத் தந்திருக்கும் ரைபோசோம் ஆய்வைப் பற்றி எழுதப்பட்ட நூல். ரைபோசோம் என்றால் என்ன என்று பள்ளி இறுதி வரை படித்த அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அதன் வியப்பூட்டும் இயல்புகளை அறிந்திருக்கமாட்டோம். நம் உயிரின் அடிப்படையான அம்சம் புரோட்டீன்கள், உடல் செல்களின் கட்டுமானம், அவற்றின் செயல்பாடுகள் புரோட்டீன்களால் கட்டமைக்கப்படுவதற்கு DNA என்ற மரபுப் பண்பு கடத்திகளே உதவுகின்றன. இவை அளிக்கும் செய்திகளைப் பெற்று உரிய புரோட்டீன்களை உருவாக்குபவை ரைபோசோம்கள் என்று மட்டும்தான் நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ரைபோசோம்கள் பற்றிய வெங்கி ராமகிருஷ்ணனின் ஆய்வு முடிவுகள், வருங்கால மருத்துவச் சிகிச்சை முறைகளுக்குப் புதிய வாசல்களைத் திறந்துவிட்டிருக்கிறது.

இந்த ஆச்சரியகரமான ரைபோசோம்களைப் பற்றி வெங்கி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு முன்பே பல ஆராய்ச்சிகள் நடந்திருந்தாலும், ரைபோசோம் ஆய்வுகளில் திருப்புமுனையை ஏற்படுத்தியது நமது பேராசிரியரின் ஆய்வு முடிவுகளே இவர் ரைபோசோமின் மூலக்கூறு அமைப்பையும், மூலக்கூறு அளவிலான செயல்பாட்டையும் கண்டறிந்தார். இக்கண்டுபிடிப்பு மருந்து பொருட்களின் செயல்திறன்களை அறிய வழிவகுக்கிறது. இம்மாபெரும் சாதனைக்காகவே பேராசிரியர் வெங்கி அவர்களுக்கு வேதியியலில் நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

"ஜீன் மெஷின்" எனும் வெங்கி ராமகிருஷ்ணன் அவர்களின் நூல் அமெரிக்காவினுள் அவர் நுழைவதில் இருந்து துவங்குகிறது. அங்கு அவரின் ஆரம்பகால செயல்பாடுகள் ஒரு சராசரி மாணவரைப் போலவே இருந்திருப்பதை அறிகிறோம். பல போராட்டங்களுக்கிடையே இயற்பியலில் ஆய்வுப் பட்டம் பெற்ற பின்பு, உயிரியலின் பல பிரிவுகளையும் கற்றுத் தேர்ந்து ஆய்வுப்பட்டம் பெற்றதற்குப் பிறகு அவர் அடைந்த உயரம் சாதாரணமானதல்ல.

இந்நூலின் ஆரம்பப் பகுதியில் தனது இயற்பியல் அறிவு குறித்தும், உயிர். வேதியியலில் அவர் கொண்டிருந்த நாட்டம் DNA வின் பக்கம் திரும்பியதைப் பற்றியும் விளக்குகிறார். DNA-வின் அமைப்பு, செயல்படும் விதம், RNA-வின் முக்கியத்துவம், புரோட்டீன்களின் உருவாக்கத்தில் ரைபோசோம்களின் பங்களிப்பு போன்றவற்றை அவர் எளிமையாக விளக்குவது இந்நூலின் சிறப்பம்சம்.

'Scientific American' இதழில் ரைபோசோம்கள் பற்றிய ஒரு கட்டுரையை வாசித்த வெங்கி அவர்களுக்கு ரைபோசோம்களின் மீது காதல் ஏற்படுகிறது. டான் எங்கிள்மேன் அவர்களின் அறிவுரையால் யேல் பல்கலைக் கழகத்தின் பீட்டர் மூர் அவர்களைத் தொடர்பு கொண்டதிலிருந்து ரைபோசோம் ஆய்வுப் பயணம் துவங்குகிறது.

பீட்டர் மூருடன் முதுமுனைவர் ஆய்வுக்காலத்தை முடித்தபின் புரூக்ஹேனில் ஆய்வுகளைத் தொடர்கிறார். ஓராண்டிற்குப் பிறகு மீண்டும் கேம்பிரிட்ஜ் திரும்பி MRC யில் தனது இறுதிநிலை ஆய்வுகளைத் தொடர்கிறார். இந்த ஆய்வுக் காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளுடன் பழகுகின்ற வாய்ப்புகளும் பல புதிய ஆய்வு முறைகளை அறிந்து கொண்டு தனது திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளும் அவர்க்குக் கிடைக்கின்றன. அவர் மேற்கொண்ட செய்முறைகளும், அவற்றின் முடிவுகளும் உண்மையில் சாதாரண வாசகர்கள் புரிந்துகொள்ளக் கடினமானவை. ஆனால் வெங்கி ராமகிருஷ்ணன் அவற்றை மிக எளிமையான நடையில் மிகத் தெளிவாக எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்குகிறார். படிகமாக்குதலில் பல தோல்விகளைச் சந்தித்து பின் அவர் வெற்றிபெறும் கட்டம் படிப்பவர்களுக்கு நிச்சயமாக சிலிர்ப்பூட்டும்.

இதே காலக்கட்டத்தில் உலகின் வேறு சில ஆய்வகங்களிலும் ரைபோசோம் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்துறையில் ஒரு கடுமையான போட்டி ஏற்படத் துவங்குகிறது குறிப்பாக இஸ்ரேல் நாட்டின் ஆடாயோனத்துடன் ஏற்படும் போட்டிகளை அவர் விவரிக்கும்போது ஒரு துப்பறியும் நாவலைப் படிப்பதைப் போலிருக்கிறது

இறுதி நிலையாக இங்கிலாந்தின் LMB ஆய்வகத்தில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் அவரை மிகச்சரியாக நோபல் பரிசிற்கான பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. LMB யில் பல இளம் ஆராய்ச்சியாளர்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் வெங்கி ராமகிருஷ்ணன் அவர்கள் எல்லோருக்கும் உரிய மரியாதை கொடுப்பதுடன் அவர்களின் பரிந்துரைகளையும் ஏற்றுக் கொண்டு செயல்படுகிறார். தோல்விகள் பலவற்றைச் சந்திக்க நேரிட்டாலும் அவர்கள் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து செயல்படுகிறார்கள். ஆய்வு நேரங்களின் அன்றாட நிகழ்வுகள், வேடிக்கையான சம்பவங்கள், தோல்விகள், வெற்றிகள், அலைச்சல்கள், மன அழுத்த காலக்கட்டங்கள் என வாழ்க்கையின் பல அனுபவங்களையும் ரைபோசோம் ஆய்வு தினங்களில் அவர்கள் அடைவதை வெங்கி ராமகிருஷ்ணன் எழுத்துகளில் வாசிக்கும்போது வாசிக்கும் நமக்குப் பெரும் மனத்திறப்பு ஏற்படுகிறது.

ரைபோசோம் ஆய்வுப் போட்டிகளில் இவர் முன்னிலை வகிக்கத் துவங்குகையில், நோபல் பரிசு கிடைப்பதற்கான சமிக்ஞைகளை அவரால் உணர முடிகிறது இவருக்குத்தான் நோபல் கிடைக்கப்போகிறது என்று நாம் அறிந்திருந்தாலும், முடிவு தெரிந்த ஒரு மர்மப்படத்தை பதற்றத்தோடு பார்க்கும் உணர்வை இவரது எழுத்து வன்மை உண்டாக்கிவிடுகிறது.

இந்தப் புத்தகத்தை ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்குபவர்கள் வெங்கி ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெறும் தருணம் எப்போது வரும் என்றே காத்துக்கொண்டு ஒவ்வொரு பக்கத்தையும் திருப்பிக்கொண்டிருப்பார்கள். அந்த உன்னதத் தருணம் நிகழும்போது வெங்கி அவர்களின் எழுத்துவள்மை உச்சத்தை அடைகிறது. அவரது ஸ்டாக்ஹோம் பயணமும், பரிசளிப்பு நிகழ்வும், பரிசளிப்பின் பிறகு நடைபெறும் விருந்தும், பின் வரிசையாக அழைக்கப்படும் விழாக்களும் மறக்கமுடியாத வாசிப்பு அனுபவத்தை அளிக்கின்றன.

இந்தக் கட்டத்தில் நோபல் மற்றும் பிற பரிசுகள் பற்றிய தனது எண்ணங்களை வெளிப்படையாகவே விவரிக்கிறார் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கும் முறைகள், கடைப்பிடிக்கப்படும் செயல்முறைகள் ஆகியவை நம்மை வியப்பின் உச்சத்துக்குக் கொண்டு செல்கின்றன. நோபல் பரிசு பெறுவதற்கு முன்பாக உள்ள நிலையை 'Prenobilities' எனவும் பரிசு பெற்ற பிறகான நிலையை 'Postnobilities' எனவும், ஓராண்டில் இரு துறையில் வெவ்வேறு இடங்களில் ஆய்வு நடத்திய மூன்று பேருக்கு நோபல் பரிசைப் பகிர்ந்தளிப்பதை 'மூவர் விதி எனவும் நகைச்சுவையாகக் குறிப்பிடும்போது இந்த அறிவியல் அறிஞர் இலக்கியவாதியாகிறார். பலரும் அறிந்திராத "Breakthrough Prize' எனப்படும் திருப்புமுனை விருது பற்றி இந்த நூலின் வழியாகவே நாம் அறிந்துகொள்கிறோம்.

நூலின் இறுதிப் பகுதியில் தன்னுடன் ஆராய்சிகளில் ஈடுபட்டிருந்த அனைவரைப் பற்றியும் அன்புணர்வுடன் விவரித்திருப்பதில் இவரின் மனிதநேயமும் உயர்பண்புநலனும் வெளிப்படுகிறது. தனது ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் போன்றவை பிற்கால ஆய்வுகளுக்கும் மனித மேம்பாட்டிற்கும் எத்தகைய நன்மைபயப்பவை என்பதை விவரித்து தனது நூலை நிறைவு செய்யும்போது ஒரு மகத்தான நூலை வாசித்து முடித்த மனநிறைவு உண்டாகிறது.

வெங்கி ராமகிருஷ்ணனின் விடாப்பிடியான தொடர் முயற்சிகளையும் கற்றலின் ஆர்வத்தினையும் ஆய்வு வேட்கையினையும், கடினமான ஆய்வு விவரங்களையும், அறிவியல் நுட்பங்களையும் மூல நூலான ஆங்கிலத்தில் வாசிக்கும்போது உண்டான அதே உணர்வு தமிழ் மொழிபெயர்ப்பிலும் ஏற்படுகிறது. மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் சற்குணம் ஸ்டீவன் ஒரு மிகச்சிறந்த விலங்கியல் பேராசிரியர் 34 வருட கல்விப்பணியில் ஆங்கில வழியில் மட்டுமன்றித் தமிழ் வழியிலும் பல்வேறு கல்லூரிகளில் பயிற்றுவித்த அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வியில் உயிரியல் பாடத்திட்டக் குழுவிலும் பாட நூல் குழுக்களிலும் தலைமைப் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் அறிவியல் கலைச் சொல்லாக்கக் குழுவில் பணியாற்றியவர். கற்பித்தலில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் அறிவியல் விஷயங்களை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். ஜீன் மெஷின் என்ற இந்த அபாரமான நூலில் இடம்பெற்ற கலைச்சொற்களைத் தமிழில் மிக அழகாக அவரால் மொழிமாற்றம் செய்ய முடிந்திருக்கிறது. அவ்வப்போது சில சலுகைகளை எடுத்துக்கொண்டு தமிழின் எளிய வாசகர்களுக்கு விளக்கும் விதமாக அடிக்குறிப்புகளில் கடினமான இடங்களை எளிமையாக விளக்குகிறார். இந்த நூலை வெங்கி ராமகிருஷ்ணன் பலவிதமான மனநிலைகளில் எழுதிச் செல்கிறார் சில இடங்களில் தீவிரத் தொனியிலும், சில இடங்களில் நகைச்சுவையோடும் அவர் எழுதியிருப்பதை அதே அலைவரிசையில் தமிழிலும் கொண்டு வந்திருக்கிறார் பேராசிரியர் ஸ்டீவன்.

தமிழரான வெங்கி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நோபல் கிடைத்த போது நம்மெல்லோருக்கும் கிடைத்த கௌரவம் என்று பெருமிதம் அடைந்தோம். இப்போது அவருடைய தாய்மொழியில் அவருடைய நூல் அற்புதமாக மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருக்கும்போது தமிழுக்கும் ஓர் உன்னத விருது கிடைத்திருப்பதாக மீண்டும் நாம் பெருமிதம் கொள்ளலாம்.

மேலும் படிக்க | CICT: தொல்காப்பியம் இந்தி மொழியில்! கன்னடத்தில் எட்டுத்தொகை பத்துப்பாட்டு! 

Trending News