மக்களவை தேர்தலில் நான் வெற்றி பெறுவதை பாஜகவால் தடுக்க முடியாது என திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையை எதிர்த்து திமுக வேட்பாளர் கனிமொழி போட்டியிடுகிறார். குறிஞ்சி நகரில் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.


வீடு, அலுவலக கதவுகளை மூடிவிட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. பணப்பட்டுவாடா புகாரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது அங்கு திரண்டு வந்த தி.மு.க.வினர், பா.ஜ.க.வையும், தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த சோதனையில் பணமோ, ஆவணமோ கிடைக்காததால் வருமான வரி அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். 


வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கூறுகையில்; ‘8.30 மணி அளவில் வருமான வரித்துறையினர் எனது வீட்டுக்கு வந்தனர். தேர்தலை நிறுத்த பா.ஜ.க. சதி செய்கிறது. தேர்தலில் நான்  வெற்றி பெறுவதை BJP-யால் தடுக்க முடியாது. வருமான வரித்துறையினர் சோதனை செய்ய வந்தபோது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டேன். இந்த நேரத்தில் சோதனை செய்யலாமா? என்று கேட்டதற்கு அவர்களிடம் பதில் இல்லை. சோதனை நடத்திய இடத்திலேயே எனக்கு சம்மன் கொடுத்தார்கள்.


அது, சட்டத்துக்கு புறம்பானது. இந்தச் சோதனையில் இங்கிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதனை, அவர்களே ஒப்புக்கொண்டார்கள். இந்தத் தொகுதியில் எப்படியாவது தேர்தலை நிறுத்திவிடலாம் என்ற ஆசையில்தான் இங்கே சோதனை செய்யவந்தனர். அவர்களது, ஆசை நிராசையாக போனது. இந்தச் சோதனையால், தி.மு.க தொண்டர்கள் அச்சப்படமாட்டார்கள். இனிமேல், தான் தொண்டர்கள் உத்வேகமாக செயல்படுவார்கள்’ என்று தெரிவித்தார்.