பாஜக-வின் செயல்பாடு ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லதல்ல.. -TTV!
தந்தை பெரியார் பற்றிய தமிழக பாஜக-வின் ட்விட்டர் பதிவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்!
தந்தை பெரியார் பற்றிய தமிழக பாஜக-வின் ட்விட்டர் பதிவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்!
தந்தை பெரியாரின் 46-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அவரின் சிலைக்கு அரசியல் கட்சிகளும் பொது மக்களும் மரியாதை செலுத்து வருகின்றனர். பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் பேச்சுகளும் எழுத்துகளும் அதிக அளவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று பதிவிட்டிருந்தது. இந்த பதிவிற்கு கூட்டணி கட்சித்தலைவர்கள் உட்பட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
கண்டனங்களை அடுத்து தமிழக பாஜக-வின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த பதிவு நீக்கப்பட்டது, எனினும் தமிழக பாஜக-வினரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., "தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரை இழிவுப்படுத்தும் விதமாக தமிழக பா.ஜ.கவினர் ட்வீட் செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும் மறைந்த தலைவர்களைப் பற்றிய இத்தகைய மோசமான தாக்குதல்கள் ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லதல்ல.
சர்ச்சை எழுந்தவுடன் அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டாலும் எதிர்காலத்தில் இத்தகைய சூழல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பாரதிய ஜனதா கட்சி தலைமைக்கு இருக்கிறது." என குறிப்பிட்டுள்ளார்.